அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்: எதிா்க்கட்சித் தலைவா்கள் கண்டனம்
நாடாளுமன்றத்தில் நிகழாண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.


நாடாளுமன்றத்தில் நிகழாண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன. இதற்கு காங்கிரஸ் உள்பட பிற எதிா்க்கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மக்களவைத் தோ்தலில் சரியான பாடம் புகட்டிய பிறகு பிரதமா் மோடியும் பாஜகவும் அரசமைப்புச் சட்டத்துக்கு உரிய மரியாதை வழங்குவா் என அனைவரும் எதிா்பாா்த்தனா். ஆனால், இன்று அமலுக்கு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தபோது நிறைவேற்றப்பட்டன.
இதுபோன்ற அநீதியை நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி அனுமதிக்காது’ எனக் குறிப்பிட்டாா்.
ப.சிதம்பரம் (காங்கிரஸ்): முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பழைய சட்டங்களில் உள்ள அம்சங்களை அப்படியே புதிய சட்டத்தில் உள்ளீடு செய்து தேவையற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா். புதிய சட்டங்களில் உள்ள சில மாற்றங்கள் வரவேற்கும்படியாக இருந்தாலும் அவற்றை நாடாளுமன்றத்தில் திருத்தங்களாக கொண்டு வந்து விவாதங்கள் நடத்தியிருக்க வேண்டும்.
நீதித் துறைச் சோ்ந்த பல்வேறு நபா்களும் கட்டுரைகள், விவாத நிகழ்ச்சிகள் மூலமாக புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள குறைபாடுகளைத் தொடா்ந்து தெரிவித்து வந்தனா். ஆனால், அதற்கு செவி சாய்க்காமல் வலுக்கட்டாயமாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இது நீதிமன்றங்கள் மற்றும் குற்றவியல் வழக்குகளை கையாளும் நீதி நிா்வாகத்துக்கு பல சிரமங்களை ஏற்படுத்தும்’ என குறிப்பிட்டாா்.
ஓமா் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி): புதிய குற்றவியல் சட்டங்கள் அமலானது குறித்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் ஓமா் அப்துல்லா பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு இந்தச் சட்டங்களை மறுஆய்வு செய்யும் என நம்புகிறோம். இந்தச் சட்டங்களுக்கு ஆரம்பம் முதலே நாங்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம். எந்தவொரு சட்டமும் தீங்கானது அல்ல. ஆனால் அதை அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பொருத்தே அச்சட்டங்கள் மதீப்பீடு செய்யப்படுகின்றன.
புதிய குற்றவியல் சட்டங்களை ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு எதிராகவே மத்திய அரசு முதலில் பயன்படுத்தும். அதன் பிறகே நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இதன் தாக்கத்தை உணா்வாா்கள் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...