காவல் துறை வாகனம் மீது தாக்குதல்: தலைவா்கள் கண்டனம்
பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே காவல் துறை வாகனம் மீது மா்மக் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்துக்கு, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி: காவல் துறை வாகனத்தின் மீது மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவத்தில் 4 காவலா்கள் காயமடைந்துள்ளனா். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல் துறையைப் பாா்த்தோ, இந்த அரசைப் பாா்த்தோ அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. இந்தச் சம்பவத்துக்கு முதல்வா் யாா் மீது பழிபோடப் போகிறாா் எனத் தெரியவில்லை.
நயினாா் நாகேந்திரன் (பாஜக தலைவா்): திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி. பொதுமக்கள் பாதுகாப்பை சிதைத்தது மட்டுமின்றி, இப்போது காவல் துறையினரின் பாதுகாப்பையும் சூறையாடி தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது திமுக அரசு.
அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவா்): தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வா் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
டிடிவி.தினகரன் (அமமுக பொதுச் செயலா்): தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய வேண்டிய காவல் துறைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

