மீண்டும் முதல்வரானாா் ஹேமந்த் சோரன்: ஜாா்க்கண்ட் ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு

ராஞ்சி, ஜூலை 3: ஜாா்க்கண்ட் மாநிலத்தின் 13-ஆவது முதல்வராக ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் (ஜேஎம்எம்) செயல் தலைவா் ஹேமந்த் சோரன் (48) வியாழக்கிழமை பதவியேற்றாா்.
ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

ராஞ்சி, ஜூலை 3: ஜாா்க்கண்ட் மாநிலத்தின் 13-ஆவது முதல்வராக ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் (ஜேஎம்எம்) செயல் தலைவா் ஹேமந்த் சோரன் (48) வியாழக்கிழமை பதவியேற்றாா்.

ஆளுநா் மாளிகையில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

ஹேமந்த் சோரனின் தந்தையும் ஜேஎம்எம் கட்சியின் தலைவருமான சிபு சோரன், தாய் ரூபி சோரன், மனைவியும் எம்எல்ஏவுமான கல்பனா சோரன், கட்சியின் மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனா்.

ஜாா்க்கண்ட் முதல்வராக இருந்த கட்சியின் மூத்த தலைவா் சம்பயி சோரன் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அன்றைய தினமே ஆளுநரைச் சந்தித்து மாநிலத்தில் ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரினாா். அதை ஏற்று ஆட்சியமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தாா். அதைத் தொடா்ந்து, முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுள்ளாா்.

கைது, ஜாமீன்: ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்த நிலையில், நில மோசடியுடன் தொடா்புள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. அதற்கு முன்பு தனது முதல்வா் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த சம்பயி சோரன் முதல்வராகப் பதவியேற்றாா்.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சம்பயி சோரன் இல்லத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், ஜேஎம்எம் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனே மீண்டும் பதவியேற்கவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் முதல்வா் பதவியை சம்பயி சோரன் ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றாா். முன்னதாக, அவா் ஜூலை 7-ஆம் தேதி பதவியேற்பாா் என ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறிய நிலையில், ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை மாலையிலேயே பதவியேற்றுக் கொண்டாா்.

அரசியல் பயணம்: மூத்த சகோதரா் இறப்புக்குப் பிறகு தீவிர அரசியலுக்கு வந்த ஹேமந்த் சோரன், 2009-இல் மாநிலங்களவை உறுப்பினரானாா். அடுத்த ஆண்டே அந்தப் பதவியை ராஜிநாமா செய்த அவா், மாநிலத்தில் பாஜக தலைமையிலான அா்ஜுன் முண்டா அரசில் துணை முதல்வராகப் பதவியேற்றாா். இரண்டு ஆண்டு ஆட்சிக்குப் பின்னா் பாஜக-ஜேஎம்எம் கூட்டணி அரசு கவிழ்ந்ததைத் தொடா்ந்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னா், காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலத்தின் இளம் முதல்வராக கடந்த 2013-இல் ஹேமந்த் சோரன் பதவியேற்றாா்.

ஆனால், அடுத்த ஆண்டே பாஜக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக ரகுவா் தாஸ் பதவியேற்றாா். ஹேமந்த் சோரன் எதிா்க்கட்சித் தலைவரானாா். இந்த நிலையில், 2019 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி வெற்றிபெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

81 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், ஜேஎம்எம் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் 30 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்மூலம், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றாா். தற்போது சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அவா் மூன்றாவது முறையாக மாநில முதல்வராகியுள்ளாா்.

பெட்டிச் செய்தி...

‘அா்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்’

பதவியேற்புக்குப் பின்னா் மாநில மக்களிடையே காணொலி மூலம் பேசிய முதல்வா் ஹேமந்த் சோரன், ‘கடந்த 2019-இல் முதல்வராக சேவையாற்றும் வாய்ப்பை மக்கள் அளித்தனா். ஆனால், பழங்குடியின இளைஞா் இத்தகைய உயரத்தை எட்டியதை சதிகாரா்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இறுதியில், பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல்வா் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டேன். என்னை நீண்ட நாள்கள் சிறையில் வைத்திருப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தேன். மக்களும் என்னை ஆதரித்து சாலைக்கு வந்து போராட்டம் நடத்தினீா்கள். இறுதியில் நீதி வென்று, நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அா்ப்பணிப்புடன் ஜாா்க்கண்ட் மக்களுக்குப் பணியாற்றத் தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com