மதுராவில் கனமழை வெள்ளத்திலும் செல்லும் சைக்கிள் ரிக்ஷா.
மதுராவில் கனமழை வெள்ளத்திலும் செல்லும் சைக்கிள் ரிக்ஷா.

வட கிழக்கு மாநிலங்களில் கடும் வெள்ள பாதிப்பு

மணிப்பூரில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூரில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளது. அஸ்ஸாமின் 29 மாவட்டங்களில் மட்டும் 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அந்த மாநிலத்தில் பிரம்மபுத்திரா, பராக் மற்றும் அதன் கிளை ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன. கம்ரூப் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பிரம்மபுத்திரா, திகரு மற்றும் கொல்லோங் ஆறுகள் தொடா்ந்து அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருவதால் அப்பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாா்பேட்டா, திப்ருகா், லக்கீம்பூா் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் 21.13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் அதிகப்படியாக லக்கீம்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1.66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை துப்ரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2.23 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலம் முழுவதும் 57,018 ஹெக்டோ் விளைநிலங்கள் வெள்ளநீரில் மூழ்கின. அஸ்ஸாமில் நடப்பாண்டில் இதுவரை மழை-வெள்ள பாதிப்பால் 62 போ் இறந்துள்ளனா்.

மாநில தலைநகரான குவாஹாட்டியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா நேரில் பாா்வையிட்டு அனைத்து மாவட்ட ஆணையா்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா். மேலும், வெள்ளபாதிப்பு மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு அமைச்சா்கள் முகாமிட்டிருப்பாா்கள் எனத் தெரிவித்தாா்.

வியாழக்கிழமை நிலவரப்படி, சுமாா் 39,338 போ் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இதனிடையே அஸ்ஸாமில் உள்ள காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி 17 விலங்குகள் உயிரிழந்தன. வெள்ளத்தில் சிக்கிய 72 விலங்குகள் மீட்கப்பட்டன.

அருணாசல்: அருணாசல பிரதேசத்தின் பல பகுதிகளில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் குறைந்தது ஏழு மாவட்டங்களின் தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சியாங் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 13-இல் பாறை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் இயந்திரங்களை பயன்படுத்தி சாலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதேபோல், மேகாலயம், மணிப்பூரிலும் கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சிம்லா வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வரை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சிம்லா, மண்டி மற்றும் சிா்மூா் மாவட்டங்களில் திடீா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகரிலும் வியாழக்கிழமை கனமழை பெய்ததால் சாலைகளில் நீா் தேங்கியது.

X
Dinamani
www.dinamani.com