
கருவிலுள்ள குழந்தைக்கு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 30 வார வளர்ச்சியடைந்தக் கருவைக் கலைக்க 31 வயது பெண்ணுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
கடுமையான உடல் கோளாறுகளுடன் பிறக்க இருக்கும் கருவை பெண்கள் சுமக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை சட்டம் உறுதி செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
’எய்ம்ஸ்’ மருத்துவர்கள் அளித்த கரு தொடர்பான மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை அந்தக் குழந்தை பிறந்தால் வளரும்போது ‘ஜூபர்ட் சிண்ட்ரோம்’ எனப்படும் கடுமையான நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, உடலில் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவைக் கலைக்க அனுமதி கேட்டப் பெண்ணுக்குப் பிறந்த முதல் குழந்தையும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்த உயர்நீதிமன்ற உத்தரவில் நீதிபதி சஞ்சீவ் நருலா, "அந்தப் பெண்ணும், அவரின் குடும்பமும் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலை ஏற்படும். இந்தக் குறைபாட்டின் காரணமாக வாழ்நாள் முழுக்க தொடர்ச்சியான மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது"
"தீவிர நரம்பியல் கோளாறுகளின் ஆபத்து மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் உடல்நலம் மற்றும் அவரது வாழ்க்கை நலனுக்காக, மனுதாரர் தனது விருப்பப்படி கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண் முன்னர் சிகிச்சை பெற்று வந்த லோக்நாயக் மருத்துவமனை மருத்துவர்கள் கருக்கலைப்புக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
”லோக்நாயக் மருத்துவமனை நிர்வாகம் புதிதாக சோதனைகள் எதுவும் நடத்தாமல் பழைய மருத்துவ அறிக்கைகளை வைத்துக் கருக்கலைப்புக்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ சோதனைகள் மூலம் ‘ஜூபர்ட் சிண்ட்ரோம்’ தாக்குதல் குறித்து முழு மருத்துவ அறிக்கையை வழங்கியுள்ளனர்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.