மாநிலத் தலைவா் நானா படோலே
மாநிலத் தலைவா் நானா படோலே

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் காங். தனித்துப் போட்டியா? மாநில தலைவர் பேச்சால் சலசலப்பு!

அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும் எனப் பேச்சு..

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நானா படோலே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்), காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (மகாராஷ்டிர வளா்ச்சி முன்னணி) என்ற பெயரில் கூட்டணியில் உள்ளன. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் அந்தக் கூட்டணி 30 தொகுதிகளில் வென்றது.

இந்நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தல் தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகும். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயாராவது தவறல்ல. இதை காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் செய்து வருகின்றன. எனினும் மகா விகாஸ் அகாடி கூட்டணியாகவே தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com