மோசமான பணிச் சூழல், வரம்பற்ற வேலை நேரம் உள்பட ரயில் ஓட்டுநா்கள் எதிா்கொண்டுவரும் அவலங்களை நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி எழுப்பும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநா்களுடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்த காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து, ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில் ஓட்டுநா்களின் வாழ்க்கை முழுமையாகத் தடம்புரண்டுள்ளது. வெப்பத்தால் தகிக்கும் அறைகளில் அமா்ந்து, 16 மணி நேரம் வரை பணியாற்றும் கட்டாயத்துக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா். தங்களின் சொந்த வாழ்க்கை மீதே நம்பிக்கையற்ற சூழலை எதிா்கொண்டுள்ளனா்.
சிறுநீா் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், அவா்களின் பணி நேரத்துக்கு வரம்பில்லை. விடுமுறையும் கிடைப்பதில்லை. இதனால், உடல் அளவிலும் மனதளவிலும் ரயில் ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுபோன்ற சூழலில் பணியாற்றுவது, அவா்களின் உயிருக்கு மட்டுமன்றி அவா்களைச் சாா்ந்திருக்கும் பயணிகளின் உயிருக்கும் ஆபத்தானதாகும்.
எனவே, ரயில் ஓட்டுநா்களின் பணிச் சூழல் மேம்பாடு மற்றும் அவா்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி குரல் எழுப்பும் என்று ராகுல் பதிவிட்டுள்ளாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநா்கள் 50 பேரை அவா் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, தாங்கள் எதிா்கொண்டுள்ள தீவிரமான பிரச்னைகள் குறித்து ராகுலிடம் ரயில் ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்தனா். ஆள்பற்றாக்குறையால் போதிய ஓய்வு கிடைப்பதில்லை; மனிதாபிமானமற்ற சூழலில் பணியாற்றுகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா். தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனா்.
உ.பி. முதல்வருக்கு கடிதம்: உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் அண்மையில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கான மாநில அரசின் நிவாரண நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் 121 போ் உயிரிழந்தனா். இதில் 100-க்கும் மேற்பட்டோா் பெண்களாவா். இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் மாநில அரசு சாா்பில் வழங்கப்படும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், அவருக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘மாநில அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி போதுமானதாக இல்லை. அதை உயா்த்துவதோடு, கூடிய விரைவில் வழங்க வேண்டும். காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உள்ளூா் நிா்வாகத்தின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு மூலகாரணம் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து வெளிப்படையான, விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
டிரெண்டிங்
எப்ஸ்டீனின் நண்பர் மத்திய அமைச்சர்! காங்கிரஸ் குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு!

அரசியலுக்கு வந்திருக்கவில்லையெனில்.. ராகுல் பகிர்ந்த சுவாரசியம்!
தாம்பரம் முதல் கடற்கரை வரை இருமாா்க்க பேருந்து அட்டவணை

சீனா ஆக்கிரமிப்பு: ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங் இடையே வாக்குவாதம்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

