
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்குச் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஜிரிபாம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாமுக்குச் சென்ற ராகுல், அங்கிருந்தவர்களுடன் உரையாடி, பல்வேறு தகவல்களையும் கேட்டறிந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் நேரிட்ட மத வன்முறைக்கு 200 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து மணிப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது வன்முறை நேரிட்டுக்கொண்டே இருப்பது அம்மாநில மக்களவை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அப்போது முதல் மக்கள் பாதுகாப்புக்காக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் முதல் முறை மணிப்பூர் வந்துள்ளார். அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நிவாரண முகாமுக்குச் சென்று மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்தார்.
புது தில்லியில் இருந்து இன்று காலை அசாமின் சில்சாருக்கு விமானம் மூலம் வந்த ராகுல், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார். பிறகு அங்கிருந்து மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்கு வந்தார். அங்குள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிட்டு, மக்களிடம் பேசினார்.
பின்னா், மீண்டும் சில்சாருக்கு வந்து, அங்கிருந்து இம்பாலுக்கு விமானத்தில் பயணிக்கிறார். இம்பாலில் இருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் அவா், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவ்வப்போது வன்முறை நீடித்து வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் வன்முறை நிகழ்ந்தது.
இம்மாநிலத்தில் இனமோதல் ஏற்பட்ட பிறகு இருமுறை ராகுல் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளாா். இது ராகுல் காந்தியின் மூன்றாவது பயணம். அதேநேரம், பிரதமா் மோடி ஒருமுறைகூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.