இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை கண்டு உலக நாடுகள் வியப்பு: மோடி

கசான் மற்றும் யெகாடெரின்பர்க்கில் புதிய தூதரகங்கள் திறக்கப்படும் என்று மோடி அறிவிப்பு.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிDOTCOM
Published on
Updated on
1 min read

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அடைந்துள்ள வளர்ச்சியின் வேகத்தை கண்டு உலகமே வியப்படைவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ரஷியாவுக்கு மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் இன்று புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்வில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பிரதமர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அடைந்துள்ள வளர்ச்சியின் வேகத்தை கண்டு உலகமே வியப்படைகிறது. உலக மக்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, ’இந்தியா மாறுகிறது’ என்கிறார்கள்.

இந்திய விமான நிலையங்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்கியபோது இந்தியாவின் சக்தியை உலகம் உணர்கிறது.

இன்றைய இந்தியாவில் உலகின் மிக உயரமான ரயில் பாலம், உலகின் மிக உயரமான சிலை உள்ளிட்டவை அமைக்கும்போது இந்தியா மாறுவதை உலகமே சொல்கிறது.

140 கோடி மக்களின் ஆதரவை இந்தியா நம்புகிறது. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் ஆதரவை நம்புகிறது. 140 கோடி இந்தியர்களும் ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் இருக்க தயாராகி வருகிறார்கள்.

கரோனா பெருந்தொற்றை கடந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். நமது உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்குவது மட்டுமின்றி சுகாதார சேவைகளை மேம்படுத்துவது, அனைத்து ஏழைக்கும் இலவச சிகிச்சை அளிப்பதை செய்து வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி
3 மடங்கு வலிமையுடன், அதிவேகத்தில் பணியாற்றுவேன்: ரஷியாவில் மோடி உரை

2014-க்கு முன், நாடு விரக்தியின் ஆழத்தில் மூழ்கியிருந்தது, தற்போது தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் கடைசி பந்து மற்றும் கடைசி நிமிடம் வரை இந்திய இளைஞர்கள் தோல்வியை ஏற்கவில்லை.

பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு இந்தியா ஒரு சிறந்த அணியை அனுப்புகிறது. முழு அணியும் விளையாட்டு வீரர்களும் தங்கள் பலத்தை எவ்வாறு காட்டுவார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். இளைஞர்களின் இந்த தன்னம்பிக்கைதான் இந்தியாவின் உண்மையான மூலதனம். இந்த இளைஞர் சக்தி, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய ஆற்றலை காட்டுகிறது.

நல்ல செய்திகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கசான் மற்றும் யெகாடெரின்பர்க்கில் புதிய தூதரகங்களை திறக்க முடிவு செய்துள்ளோம். இது பயணம் மற்றும் வணிக வர்த்தகத்தை மேம்படுத்தும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com