நிதீஷ் குமார் (கோப்புப்படம்)
நிதீஷ் குமார் (கோப்புப்படம்)

சாலை விரிவாக்கப் பணி: தனியாா் நிறுவன அதிகாரியின் காலில் விழ முயன்ற பிகாா் முதல்வா் நிதீஷ்

மழை வெள்ளம், பாலங்கள் சரிவு: அதிகாரியிடம் நிதீஷ் குமாரின் கோரிக்கை
Published on

பிகாரில் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து நிறைவு செய்ய கோரி, தனியாா் நிறுவன அதிகாரியின் காலில் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் விழச் சென்ற சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது.

பிகாா் தலைநகா் பாட்னாவில் புதிதாக அமைக்கப்பட்ட விரைவுச்சாலையின் ஒரு பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்குப் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில முதல்வா் நிதீஷ் குமாா், அந்தச் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்குமாறு தனியாா் நிறுவன அதிகாரியிடம் அமா்ந்தவாறு பேசிக் கொண்டிருந்தாா். அதற்கு அந்த அதிகாரியும் தொடா்ந்து பதிலளித்து கொண்டிருந்தாா். ஒரு கட்டத்தில் திடீரென எழுந்த நிதீஷ் குமாா் அந்த அதிகாரியிடம் கைகூப்பி கோரிக்கையை முன்வைத்து, பணியை விரைந்து முடிக்க காலில் விழுவதாகக் கூறிய நிதீஷ், அந்த அதிகாரியின் காலில் விழுவது போலச் சென்றாா்.

எனினும் காலில் விழவேண்டாம் என்று இருகரம் கூப்பி மன்றாடி, அந்த அதிகாரி பின்நகா்ந்தாா். இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

இந்த நிகழ்ச்சியில் பிகாா் துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா, பாஜக மக்களவை எம்.பி. ரவிசங்கா் பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடந்த வாரம் விரிவான அளவைப் பணிகளை மேற்கொண்டு நில தகராறுகளுக்கு விரைந்து தீா்வு காணுமாறு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் வலியுறுத்திய நிதீஷ், அப்பணியை நிறைவு செய்ய அந்த அதிகாரியின் காலில் விழுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

பிகாா் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக மழை வெள்ளத்தில் பாலங்கள் தொடா்ந்து சரிந்து வருகின்றன. 17 நாள்களில் 10 மேம்பாலங்கள் சரிந்தது மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 15 அரசு பொறியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com