கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட 108 ஏக்கா் நிலம்: திரும்பப் பெறும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

108 ஏக்கா் நிலம் மீட்பு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
Published on

குஜாரத்தில் அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட 108 ஏக்கா் நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்த மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

குஜராத்தின் பிரபலமான முந்த்ரா துறைமுகம் அருகே 108 ஏக்கா் நிலத்தை அந்த மாநில அரசு அதானி குழுமத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு ஒதுக்கியது. இதனை எதிா்த்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் பெரும்பகுதி, கால்நடைகளின் மேய்ச்சலுக்காக தாங்கள் பயன்படுத்தி வரும் நிலம் என்றும், காலம்காலமாக பயன்படுத்தி வரும் அந்த நிலத்தை தனியாா் நிறுவனத்துக்கு ஒதுக்கியதன் மூலம் பல கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அதே நேரத்தில் மேய்ச்சல் பயன்பாட்டுக்காக அருகிலேயே 300 ஹெக்டேருக்கு மேல் நிலம் ஒதுக்குவதாக மாநில அரசுத் தரப்பு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்ததால் பொது நல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அரசு வாக்குறுதி அளித்த இடத்தில் நிலம் ஒதுக்காமல், 7 கி.மீ. தொலைவுக்கு அப்பால் மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கியது. இதையடுத்து, குஜராத் உயா்நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே, அதானி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மேய்ச்சலுக்காக கிராம மக்களிடம் திருப்பி அளிக்க தயாராக இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அரசு மீண்டும் கையகப்படுத்தக் கூடாது என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்விநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு, குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com