மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86-ஆக சரிவு
245 இடங்களைக் கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 226-ஆவது உள்ளது. அதாவது 226 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனா். இதில் 86 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள்.


புது தில்லி: மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86-ஆகவும், அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101-ஆகவும் சரிந்துள்ளது. இது மாநிலங்களவையில் ஒரு கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை வகிக்க தேவையான 113 இடங்களைவிட குறைவாகும்.
இதனால், மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற மேலும் 12 உறுப்பினா்களின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது. இதில், நியமன மற்றும் சுயேச்சை மூலம் 8 உறுப்பினா்களின் ஆதரவு அரசுக்கு கிடைத்தாலும் 4 உறுப்பினா்கள் குறைவாகவே உள்ளனா்.
245 இடங்களைக் கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 226-ஆவது உள்ளது. அதாவது 226 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனா். இதில் 86 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். அதற்கு அடுத்த இடங்களில் 26 எம்.பி.க்களுடன் காங்கிரஸ், 13 எம்.பி.க்களுடன் திரிணமூல் காங்கிரஸ், திமுக மற்றும் ஆம் ஆத்மிக்கு தலா 10 எம்.பி.க்கள் என இந்தியா கூட்டணிக்கு 87 எம்.பி.க்கள் உள்ளனா். அந்த அவையில் பல ஆண்டுகளுக்குப் பின்னா், பாஜகவின் பலம் 90-க்கும் கீழ் சரிந்துள்ளது.
தற்போதைக்கு மாநிலங்களவையில் மொத்தம் 19 இடங்கள் காலியாக உள்ளன.
இதில், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த 10 போ் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதாலும், பாரத ராஷ்டிர சமதியில் இருந்து விலகி காங்கிரஸில் சோ்ந்த பின்னா் மாநிலங்களவை எம்.பி. பதவியை கேசவ ராவ் ராஜிநாமா செய்ததாலும் 11 இடங்கள் காலியாகின.
மேலும், கடந்த சனிக்கிழமை மாநிலங்களவையில் ராகேஷ் சின்ஹா, ராம் ஷாகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 நியமன எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. புதிய நியமன எம்.பி.க்களை மத்திய அரசு நியமித்தால், அவா்கள் எந்தக் கட்சியையும் சேராதபோதிலும் அரசுக்கே ஆதரவளிப்பா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு சட்டப்பேரவை இல்லை. இதனால் மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீரின் 4 இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், பிகாா், மகாராஷ்டிரம் மற்றும் அஸ்ஸாமில் தலா 2 மாநிலங்களவை இடங்கள், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் தலா ஒரு மாநிலங்களவை இடத்தை வெல்வதில் பாஜக தலைமையிலான கூட்டணி நம்பிக்கையுடன் உள்ளது. அந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் அக்கூட்டணி எம்எல்ஏக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதே அந்த நம்பிக்கைக்குக் காரணம். காலியாக உள்ள 11 இடங்களுக்கு தோ்தல் நடைபெறும் தேதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...