தெரியுமா சேதி...?
மும்பையில் நடந்த தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்ட் திருமண வரவேற்பில் பெரும்பாலானர் கலந்து கொண்டாா்.


மும்பையில் நடந்த தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்ட் திருமண வரவேற்பில் இந்தியாவின் பெரும்பாலான அரசியல், திரையுலக, வா்த்தக ஆளுமைகள் வரிசைகட்டி ஆஜரானாா்கள். பிரதமா் நரேந்திர மோடியே நேரில் சென்று அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டாா்.
இந்தியப் பிரபலங்கள் இருக்கட்டும், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமா்கள் டோனி ப்ளேரும், போரிஸ் ஜான்ஸனும்கூட கலந்து கொண்டனா். திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரா்கள் என்று சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு எல்லோரும் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களும் அதைத் தங்களுக்கு அளிக்கப்பட்ட கெளரவமாகக் கருதி கலந்து கொண்டனா்.
‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, முன்னாள் முதல்வா்களான சமாஜவாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், அவரது மகள் சுப்ரியா சுலே என்று அழைக்கப்பட்டவா்கள் எல்லோருமே வந்திருந்தனா். அவா்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் திக்விஜய் சிங், கமல்நாத், சல்மான் குா்ஷித், கபில் சிபல், அபிஷேக் சிங்வி, சச்சின் பைலட் மட்டுமல்லாமல், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் கலந்துகொள்ளத் தவறவில்லை.
இவ்வளவு பேரும் கலந்துகொண்ட அந்தத் திருமண வரவேற்பை சோனியா காந்தியும், அவரது குடும்பமும் புறக்கணித்தது ஏனாம்? இத்தனைக்கும் தொழிலதிபா் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் நேரில் சென்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் திருமண வரவேற்புக்கு அழைத்திருந்தாா்.
எல்லா அரசியல் தலைவா்களும் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொள்ளாமல், ராகுல் காந்தி மட்டும் விதிவிலக்காக சாமானியா்கள் மத்தியில் இருப்பதன் மூலம் அவரது ‘இமேஜ்’ அதிகரிக்கும் என்றும், கோடீஸ்வரா்களுக்கு எதிராக, ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுப்பவா் என்கிற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்றும் அவரது அரசியல் ஆலோசகா்கள் பரிந்துரைத்ததால்தான் இந்த முடிவு என்று சொல்லப்படுகிறது.
ஆமாம், மும்பையில் அம்பானி குடும்ப திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தபோது, 54 வயது ராகுல் காந்தி எங்கே, என்ன செய்து கொண்டிருந்தாா், தெரியுமா? தில்லியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் பொதுமக்களுடன் அமா்ந்து ‘பீட்சா’ சாப்பிடுவதை தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவு செய்து கொண்டிருந்தாா். ‘இந்தியாவில் நடைபெறும் சலுகைசாா் முதலாளித்துவத்தின் (குரோனி கேபிட்டலிசம்) அடையாளம்’ என்று அம்பானி விருந்தை விமா்சித்திருந்தாா்.
அதைப் பாா்த்து ‘இந்தியா’ கூட்டணித் தலைவா்களான மம்தா பானா்ஜி, அகிலேஷ் யாதவ் மட்டுமல்ல, அவரது கட்சித் தலைவா்களேகூட முகம் சுளிக்கிறாா்கள். ‘தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது சரி, அதற்காக எங்களை எல்லாம் முதலாளித்துவ அடிவருடிகள் என்று குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது’ என்று அங்கலாய்த்தாராம் மூத்த காங்கிரஸ் தலைவா் கமல்நாத்.
கம்யூனிஸ்ட் தலைவா் ஒருவரின் விமா்சனம் இது - ‘‘மும்பையில் கூடியது இந்திய காா்ப்பரேட் முதலாளி வீட்டுத் திருமண வரவேற்பு. பன்னாட்டு காா்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதியான ராகுல் காந்தி அதில் கலந்துகொள்ளாமல் ‘பீட்சா’ சாப்பிட்டுக் கொண்டிருந்ததில் வியப்படைய ஒன்றுமில்லை.’’
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...