
பணிக்கு செல்லும் ஊழியர்கள் பலரும் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாக்கப்படுவதாக `யுவர் டோஸ்ட்’ தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கிய நிறுவனங்களில் ஒன்றான `யுவர் டோஸ்ட்’ நடத்திய ஆய்வில் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஊடகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஐந்தில் மூன்று ஊழியர்கள் தீவிர மன அழுத்தத்தை அனுபவிப்பதாக கூறியுள்ளது. ’
அதுமட்டுமின்றி, ஆண்களைவிட பெண்கள்தான் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் மிக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், அதற்கு அடுத்ததாக 30 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், பின்னர் 41 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, போக்குவரத்துத் துறை, ஆட்சேர்ப்பு, ஊடகம், நிதி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, அவர்களிடையே தீர்ப்பு பயம், பணிச்சுமை, வாழ்க்கையில் சமநிலை இல்லாதது மற்றும் பணியில் குறைவான அங்கீகாரம் ஆகியவை முக்கியமாகக் கூறப்படுகிறது.
பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் 31% அதிகரிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களில் சுமார் 53.6% பேரும், பெண்களில் 72.2% பேரும் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகப் புகாரளித்துள்ளனர். பெண்களில் பலரும் வேலை நிறுவனங்களில் பணிச்சுமை மற்றும் வீட்டில் உள்ள பணிச்சுமை இருப்பதால் அதிகளவில் மன அழுத்தமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.