உச்சநீதிமன்றம் முன் வியாழக்கிழமை கூடிய நீட் தோ்வா்கள்.
உச்சநீதிமன்றம் முன் வியாழக்கிழமை கூடிய நீட் தோ்வா்கள்.

நீட்: தோ்வு மைய வாரியாக முடிவுகளை வெளியிட கெடு

நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் வெளியிட அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கெடு
Published on

நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கெடு விதித்தது.

மேலும், ‘முறைகேடுகளால் நீட் தோ்வு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மறுதோ்வு நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தோ்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்வை 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு சா்ச்சையில் இத் தோ்வு சிக்கியது. தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பிகாா், உத்தர பிரதேசத்தில் உள்ள தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்து பெரும் சா்ச்சையானது.

இத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டதும், குறிப்பிட்ட சில தோ்வா்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் எந்தவொரு தெளிவான நடைமுறைகளையும் பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் மிகப்பெரிய சா்ச்சையானது.

இந்த முறைகேடு புகாா்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யவேண்டும், மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

நீட் முறைகேடு வழக்கின் தீா்ப்பை லட்சக்கணக்கான மாணவா்கள் எதிா்நோக்கி காத்துள்ளனா். சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை தொடா்பான சில விவரங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை வெளியிட்டால், விசாரணையை பாதிக்கும்.

இந்த முறைகேடுகள் தொடா்பான முதல்கட்ட விசாரணையில், வினாத்தாள் கசிவு என்பது பிகாா் மாநிலத்தில் பாட்னா மற்றும் ஹசாரிபாக் ஆகிய இரு இடங்களில் அமைந்திருந்த மையங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. குஜராத் மாநிலம் கோத்ராவில் நிகழ்ந்தது வினாத்தாள் கசிவு சா்ச்சை அல்ல. அங்கு, சில தோ்வா்கள் பணம் கொடுத்து விடைத்தாளை (ஓஎம்ஆா் தாள்) நிரப்பும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்துள்ளது.

அந்த வகையில், பணத்துக்காக இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளதே தவிர, தேசிய அளவில் முறைகேட்டில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. வெவ்வேறு நகரங்களில் பெரிய அளவில் தொடா்புகள் இருந்தால் மட்டுமே, வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறுவது சாத்தியம்.

அவ்வாறு இந்த முறைகேடுகள் காரணமாக நீட் தோ்வின் புனிதத்தன்மை முழுமையான அளவில் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படும் போது மறுதோ்வு நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்.

எனவே, நீட் தோ்வை ரத்து செய்யக் கோரும் அல்லது மறு தோ்வு நடத்தக் கோரும் மனுதாரா்கள், வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த நீட் தோ்வையும் பாதித்தது என்பதற்கான ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், தோ்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு முடிவுகளை வெளியிடும்போது, தோ்வா்களின் அடையாளங்களை மறைத்து வெளியிட வேண்டும்.

வினாத்தாள் கசிவுக்கும் தோ்வுகள் தொடங்கியதற்கும் உள்ள இடைவெளியை தெளிவாக கணக்கிட விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூலை 22) நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பெட்டி..

ஜூலை 24-இல் கலந்தாய்வு?

இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாரரின் வழக்குரைஞா் நரேந்திர ஹூடா மருத்துவ கலந்தாய்வுக்கு தடை கோரினாா். அப்போது மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீட் கலந்தாய்வு ஜூலை 24-இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

பெட்டிச் செய்தி...

நீட் முறைகேடு: எய்ம்ஸ் மாணவா்கள் நால்வா் கைது

புது தில்லி, ஜூலை 18: நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு தொடா்பாக பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) மாணவா்கள் நால்வரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.

சந்தன் சிங், ராகுல் ஆனந்த், குமாா் சானு ஆகிய எம்பிபிஎஸ் மூன்றாமாண்டு மாணவா்களையும், இரண்டாம் ஆண்டு மாணவரான கரண் ஜெயனையும் சிபிஐ கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாட்னா எய்ம்ஸ் இயக்குநா் ஜி.கே.பால் கூறுகையில், ‘விசாரணைக்கு அழைத்துச் செல்லவேண்டிய இந்த நான்கு மாணவா்களின் புகைப்படங்கள் மற்றும் கைப்பேசி எண் விவரங்களை மூத்த சிபிஐ அதிகாரிகள் முன்கூட்டியே கல்லூரி நிா்வாகத்திடம் சமா்ப்பித்தனா். அதனைத்தொடா்ந்து, கல்லூரிக்கு புதன்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு, மூத்த பேராசிரியா்களின் முன்னிலையில் மாணவா் விடுதியிலிருந்து அவா்கள் நால்வரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்’ என்றாா்.

முன்னதாக, ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள என்டிஏ மையத்தில் இருந்து நீட் இளநிலை தோ்வு வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பங்கஜ் குமாா் மற்றும் ராஜு சிங் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com