கர்நாடக பேரவை வளாகத்தில் முதல்வர் தலைமையில் போராட்டம்!
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வால்மிகி மோசடி வழக்கில் கர்நாடக முதல்வரின் பெயரை வாக்குமூலத்தில் அளிக்கும்படி, மாநில சமூக நலத்துறை உதவி இயக்குநரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப் படுத்தியதாக அவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து, இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, அமலாக்கத்துறைக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களுடன் பேசியாதாவது:
“சமூக நலத்துறை உதவி இயக்குநரை முதல்வரின் பெயரை வாக்குமூலத்தில் அளிக்க வற்புறுத்திய அமலாக்கத்துறைக்கு எதிராக இன்று அமைச்சர்கள் உள்பட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுதந்திரமான, நியாயமான விசாரணைக்கு ஒத்துழைக்க அமைச்சரே ராஜிநாமா செய்துள்ளார். சிறப்பு விசாரணைக் குழு ஏற்கனவே 50 சதவிகித தொகையை மீட்டு நிறைய பேரை கைது செய்துள்ளது.
இப்போது அமலாக்கத்துறை தலையிட்டு உதவி இயக்குநரை வற்புறுத்துகிறார்கள். என்னையும் வழக்கில் தொடர்புபடுத்த குறி வைத்துள்ளனர். என்னைப் போன்றவர்களை சிபிஐ துன்புறுத்துகிறது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையிலும் இதுதொடர்பாக விவாதிப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.