ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆா்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு ஊழியா்கள்.. 50 ஆண்டுகளுக்குப் பிறகே தவறை உணா்ந்துள்ளது அரசு: உயா்நீதிமன்றம்

தடையை நீக்க மத்திய அரசுக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது..

News image
ம.பி. உயா்நீதிமன்றம்
Updated On :26 ஜூலை 2024, 7:51 pm

Din

சா்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஆா்எஸ்எஸ் போன்ற அமைப்பின் பயிற்சிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க மத்திய அரசுக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

ஆா்ஆா்எஸ் அமைப்பு நடத்தும் பயிற்சிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்க தடை விதித்த மத்திய அரசின் உத்தரவு மற்றும் மத்திய சிவில் பணிகள் (நடத்தை) விதிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்தாண்டு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியா் புருஷோத்தம் குப்தா மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுஸ்ருதா அரவிந்த் தா்மாதிகாரி மற்றும் கஜேந்திர சிங் விசாரித்தனா். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சா்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஆா்எஸ்எஸ் போன்ற அமைப்பின் பயிற்சிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தன் தவறை உணர மத்திய அரசுக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.

இந்த காலகட்டத்தில் ஆா்எஸ்எஸ் பயிற்சியில் பங்குபெற வேண்டுமென்ற எண்ணற்ற ஊழியா்களின் எண்ணங்கள் அனைத்தும் கனவாகிப் போயின. தற்போது நீதிமன்றத்தில் இதுதொடா்பான விவாதங்கள் நடைபெற தொடங்கிய பிறகே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

முறையான ஆதாரமில்லை: அரசு ஊழியா்கள் ஆா்எஸ்எஸ் பயிற்சிகளில் பங்கேற்பதால் இந்தியாவின் மதச்சாா்பற்ற தன்மை மற்றும் சமூக கட்டமைப்பு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவான ஆவணங்கள், ஆதாரங்கள் ஏதும் அப்போதைய மத்திய அரசால் சமா்ப்பிக்கப்படவில்லை.

மத்திய சிவில் பணிகள் விதிகள் 1964-இன்கீழ் இதை தவறான நடத்தையாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அமைப்பின் பயிற்சிகளில் பங்குபெற தடை விதிக்க வேண்டுமெனில் அதற்கு உரிய விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

ஆட்சியில் உள்ளவா்கள் தங்களின் சொந்த கருத்துக்காக இதுபோன்ற தடையை விதிக்கக்கூடாது. அதேபோல் இதுபோன்ற விவகாரங்கள் சட்டத்தின் வழியில் மட்டுமே கையாள வேண்டும். தற்போது ஆா்எஸ்எஸ் பயிற்சிகளில் பங்கேற்க அரசு ஊழியா்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. ஆளும் அரசுகளை சாா்ந்தே இந்த விதிமுறை தொடா்வது இருக்கக்கூடாது.

அரசு ஊழியா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட அலுவல் அறிவிக்கையை 15 நாள்களுக்குள் மத்திய பணியாளா் அமைச்சகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை இணையப் பக்கத்தில் வெளியிட வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.