
பெங்களூரு விடுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் கடந்த 23ம் தேதி விடுதி அறையில் நுழையும் இளைஞர் ஒருவர், கிருத்தி குமாரி(24) தங்கியிருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டுகிறார். கதவை திறந்து வெளியே வரும் கிருத்தி குமாரியை, அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு சரமாயாக தாக்குகிறார். தொடர்ந்து கிருத்தியின் கழுத்தையும் அவர் அறுக்கிறார்.
இதில் நிலைகுலையும் கிருத்தி குமாரி கீழே விழுகிறார். பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். கிருத்தி குமாரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற பெண்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கிருத்தி குமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.
இந்த சம்பவத்தின் விடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் தப்பியோடிய இளைஞரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்தனர்.
கொலை செய்த இளைஞர் கிருத்தி குமாரிக்கு தெரிந்த நபராகத்தான் இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் கிருத்தி குமாரி கொலை தொடர்பாக அபிஷேக் என்பவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரைசன் மாவட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கிருத்தி குமாரியும் அபிஷேக்கின் காதலியும் இதற்கு முன்பு ஒரே விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். அந்த சமயத்தில் அபிஷேக்கிற்கு, வேலை இல்லாததால் அவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அபிஷேக்கின் காதலி அபிஷேக்குடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.
இருந்தாலும் அவரை விடுதிக்கு வந்து அபிஷேக் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனைக் கண்ட கிருத்தி குமாரி அபிஷேக்கின் காதலியை வேறு ஒரு விடுதியில் தங்க வைத்துவிட்டு தானும் விடுதி மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் தன் காதலி தன்னை விட்டு விலகிச் சென்றதற்கு கிருத்தி குமாரிதான் காரணம் என்று நினைத்து அபிஷேக் அவரைக் கொலை செய்துள்ளார். பிகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி எம்பிஏ படித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.