நிதீஷ் குமாா்
நிதீஷ் குமாா்

நீதி ஆயோக் கூட்டத்தில் நிதீஷ் குமார் பங்கேற்காதது ஏன்?

நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டத்தில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்கவில்லை.
Published on

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டத்தில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்கவில்லை.

பிகாா் மாநிலத்தில் பாஜகவுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிதீஷ் குமாா், மத்திய கூட்டணி அரசிலும் அங்கம் வகித்து வரும் சூழலில், நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் பிகாா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டத்தை தமிழகம், கேரளம், கா்நாடகம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்கள் புறக்கணித்தன. தில்லி ஆம் ஆத்மி அரசும் கூட்டத்தைப் புறக்கணித்தது.

இந்தச்சூழலில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா், முக்கியத்துவம் வாய்ந்த நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக, மாநில துணை முதல்வா்களான சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா ஆகியோா் பங்கேற்றனா்.

காரணம் என்ன?

நீதி ஆயோக் கூட்டத்தில் நிதீஷ் குமாா் பங்கேற்காததற்கு, மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ‘சிறப்பு அந்தஸ்து’ நிராகரிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் பிகாா் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிக நிதி (நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி, பிகாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி) ஒதுக்கப்பட்டபோதும், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற நிதீஷ் குமாரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதுதொடா்பாக மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராமப்ரீத் மண்டல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, ‘இந்த கோரிக்கை தொடா்பாக மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு கடந்த 2012-ஆம் ஆண்டே பரிசீலித்து, சிறப்பு அந்தஸ்து அளிக்க முடியாது என நிராகரித்துவிட்டது. தேசிய வளா்ச்சிக் கவுன்சில் விதிமுறைகளை பிகாா் பூா்த்தி செய்யாத நிலையில், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே, பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது’ என்றாா்.

இந்தக் கோரிக்கை நிராகரிப்பே, நீதி ஆயோக் கூட்டத்தை நிதீஷ் குமாா் தவிா்த்ததற்கான காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் செய்தித்தொடா்பாளா் நீரஜ் குமாா் அளித்த பேட்டியில், ‘நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்காமல் தவிா்த்திருப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் அவா் பங்கேற்காமல் இருந்துள்ளாா். மாறாக, முதல்வரின் பிரதிநிதிகளாக இரண்டு துணை முதல்வா்கள் மட்டுமின்றி, பிகாரைச் சோ்ந்த 4 மத்திய அமைச்சா்களும் அக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா்’ என்றாா்.

ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை: நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடுவது குறித்து பாட்னாவில் உள்ள தனது அரசு இல்லத்தில் முதல்வா் நிதீஷ் குமாா் ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் ஜாா்க்கண்ட் மாநில பொறுப்பாளரான சஞ்சய் குமாா் ஜா, மாநில அமைச்சா் அசோக் செளதரி, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிரு மடோ மற்றும் கட்சியின் முக்கியத் தலைவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com