
தில்லியில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மேயர் இல்லத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேயர் இல்லத்தை முற்றுகையிட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தில்லியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, ராஜேந்திரா நகரிலுள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் உள்ள தரதளத்துக்கு கீழ் உள்ள அறைகளில் தண்ணீர் வெள்ளம் போல சூழ்ந்தது.
தரை மட்டத்திலிருந்து சுமார் 8 அடி தாழ்வாக பயிற்சி மைய நூலகம் இருந்ததால், அங்கு அணை போல மழைநீர் வெள்ளம் சூழ்ந்ததால், மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
தீயணைப்புத் துறை, காவல் துறை உதவியுடன் 18 மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இரு பெண்கள் உள்பட 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஏஎஸ் பயிற்சி பெற்று வந்த மாணவர்கள், பயிற்சி மையத்தின் அஜாக்கிரதையாலும், உரிய கட்டமைப்பு வசதிகள், வடிகால் வசதிகள் இல்லாததாலும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி ஏராளமான மாணவர் அமைப்புகள் தில்லியில் போராட்டத்தில் இறங்கியுள்ளன. தில்லியில் காலை முதலே மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏபிவிபி அமைப்பினர், தில்லி மேயர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் புகைப்படத்தின் மீது கருப்பு மை தெளித்தும், அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி முழக்கமிட்டனர்.
பாதுகாப்பு குறைபாடுகளுடன் இயங்கும் ஐஏஎஸ் பயிற்சி மையங்களை மூட வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தில்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியினரையும் அக்கட்சியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர் அதிஷி உள்ளிட்டோருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அங்கிருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.