
புதுதில்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவர்கள் 3 பேர் அந்த மையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.
புதுதில்லியில் சனிக்கிழமை(ஜூலை 27) பெய்த கனமழையால் ராஜேந்திரா நகரிலுள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. பயிற்சி மையம் அமைந்துள்ள சாலையில் பாய்ந்தோடிய மழை வெள்ளம் பயிற்சி மையத்தின் அடித்தளத்திற்கும் பாய்ந்தோடியுள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் 8 அடி தாழ்வாக அந்த பயிற்சி மைய நூலகம் அமைந்துள்ளதே மழை நீர் அங்கு அணை போல சூழ காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கே மாணவர்கள் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் அங்கிருந்த 18 மாணவர்களையும் மீட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்தில் பயிற்சி மையத்தை சேர்ந்த நவின் டால்வின்(29) என்ற கேரள மாணவரும், டான்யா சோனி(21, தெலங்கானா), ஸ்ரேயா யாதவ்(22, உத்தர பிரதேசம்) ஆகிய இரு மாணவிகளும் உயிரிழந்துள்ளனர்.
பயிற்சி மைய வளாகத்தில் வடிகால்நீர் செல்ல உரிய அமைப்புகள் கட்டமைக்கப்படாததும், பாதுகாப்பு வசதிகள் இல்லாததுமே மாணவர்கள் மரணத்துக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தில்லி பழைய ராஜிந்திர் நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் மாணவரகளுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று இந்த பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேற்கண்ட பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சம்பவத்தை போல இதற்கு முன்பும் அருகாமை பகுதிகளில் விபத்துகள் நிக்ழ்ந்துள்ளதாகவும் ஆனால் அதன்பின்பும் தில்லி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்பதாவும் அதன் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங்கும் இன்று(ஜூலை 28) கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பயிற்சி மைய நிர்வாகம் தரப்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசத்துக்காக சேவையாற்ற தயாராகிக் கொண்டிருந்த நம்பிக்கைக்குரிய இளம் பருவத்தினரின் இழப்பு, ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நடைபெறும் விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.