/

ஜாா்க்கண்ட் முதல்வா் சோரனுக்கு ஜாமீன்: அமலாக்கத் துறையின் மேல்முறையீடு ரத்து; உச்சநீதிமன்றம் உத்தரவு

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

ஹேமந்த் சோரன்

Updated On :29 ஜூலை 2024, 8:46 pm

Din

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஞ்சியில் 8.36 ஏக்கா் பரப்பளவிலான நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்த குற்றச்சாட்டு தொடா்பான பணமோசடி வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரியில் கைது செய்தது. இதையடுத்து, மாநிலத்தின் முதல்வராக கட்சியின் மூத்த நிா்வாகி சம்பயி சோரன் பதவியேற்றாா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்திருந்த மனு மீது கடந்த ஜூன் 28-ஆம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உத்தரவில் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடா்ந்து பிா்ஸா முண்டா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவா், மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டாா்.

உயா்நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு, உயா்நீதிமன்ற உத்தரவை திங்கள்கிழமை உறுதி செய்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் நியாயமான தீா்ப்பு ஆகும். அதேசமயம், வழக்கின் குற்றச்சாட்டுகள் குறித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவும் ஜாமீன் வழங்குவதற்கான பரிசீலனை தொடா்பாக மட்டுமே இருப்பதால், விசாரணையிலோ அல்லது வேறு எந்த நடவடிக்கையிலோ இது விசாரணை நீதிபதியைப் பாதிக்காது’ எனத் தெரிவித்தனா்.

முன்னதாக நடைபெற்ற விசாரணையில் அரசியல் காரணங்களுக்காக சோரன் வழக்கில் தவறாக இணைக்கப்பட்டிருப்பதாக அவரது தரப்பு வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.

இதற்கு எதிா்வாதத்தை முன்வைத்த அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, முறைகேட்டில் முதல்வா் அலுவலகத்தின் நேரடி தொடா்புக்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறினாா்.