10 அடி அறைக்கு 15,000 வாடகை... ஐஏஎஸ் தேர்வர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை!

ஐஏஎஸ் படிக்க தில்லி சென்று பெற்றோரின் பணத்தை வீணாக்க வேண்டாம் என்றார் டிஎஸ்பி அஞ்சலி.
தில்லியில் ஐஏஎஸ் தேர்வர் தங்கியிருக்கும் சிறிய அறை
தில்லியில் ஐஏஎஸ் தேர்வர் தங்கியிருக்கும் சிறிய அறைபடம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

ஐஏஎஸ் படிக்க தில்லி சென்று பெற்றோரின் பணத்தை வீணாக்க வேண்டாம் என டிஎஸ்பி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு 10 அடி அறைக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுவதாகவும், நில உரிமையாளர்கள் வாடகையை கடுமையாக உயர்த்தி வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பெற்றோரின் பணத்தை வீணாக்காமல், அறையில் தங்கியிருந்து தங்களுக்கு கிடைக்கும் ஆன்லைன், புத்தகங்கள் போன்ற வாய்ப்புகள் மூலம் படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

தில்லியின், பழைய ரஜிந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில், தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மூன்று இளம் மாணவர்கள் பலியான சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் மாணவர் அமைப்புகள் தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பின்றி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி செயல்படும் பயிற்சி மையங்களை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நீண்டு வருகிறது.

இந்நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு படித்துவரும் மாணவர் தங்கியுள்ள அறையின் விடியோவை டிஎஸ்பி அஞ்சலி பகிர்ந்துள்ளார்.

தில்லியில் ஐஏஎஸ் தேர்வர் தங்கியிருக்கும் சிறிய அறை
ஐஏஎஸ் பயிற்சி மைய நூலகங்கள் அடித்தளத்தில் இயங்குவது ஏன்?

அந்த விடியோவைப் பகிர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''தில்லியில் 10x10 அடி அறைக்கு நீங்கள் ரூ. 12 முதல் 15 ஆயிரம் வரை வாடகையாக செலுத்துகிறீர்கள். அங்கு நில உரிமையாளர்கள் வீட்டு வாடகையை உயர்த்தி வைத்துள்ளனர். நீங்கள் படிக்கும் அறையில் ஆன்லைன் விடியோக்களில் இருந்து மட்டும் தரவுகளை சேகரித்துப் படிக்கலாம்.

வீட்டை விட்டு வெளியேறி உங்கள் குடும்பத்தின் பணத்தை வீணடிக்க தில்லிக்கு செல்ல வேண்டாம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

விடியோவில், ஐஏஎஸ் தேர்வர் தங்கியிருக்கும் குறுகிய அறையில் புத்தகங்கள், விடியோ மூலம் தகவல்களை அறிய மடிக்கணினி உள்ளன. மேலும், அந்த அறையிலேயே தனது துணிகளையும் துவைத்து உலர வைத்துள்ளார்.

இலக்கை நோக்கிய கனவும் பயிற்சியும் உறுதியாக இருந்தால், பயிற்சி மையங்களின் உதவியின்றியே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சலி கத்தாரியா, சென்னை ஐஐடி-யில் படித்து, யுபிஎஸ்சி தேர்வெழுதி ஐபிஎஸ் ஆனவர். 2016ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச காவல் துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது டிஎஸ்பியாக (துணை காவல் கண்காணிப்பாளர்) உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com