
வடமேற்கு மாநிலங்களில் ஏற்படும் வரலாறு காணாத அதிக வெப்பநிலை புழுதிப் புயல்களைத் தூண்டி, மழையின் தீவிரத்தைக் குறைக்கலாம். அடுத்த மூன்று நாட்களில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 31 முதல் ஜூன் 3 வரை கிழக்கு ராஜஸ்தானிலும், மே 31 முதல் ஜூன் 1 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திலும், ஜூன் 1, 2 ஆம் தேதி மேற்கு ராஜஸ்தானிலும் புழுதிப் புயல் வீசக்கூடும்.
வடக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை, புழுதிப் புயல்கள் உருவாவதை அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வாணலி போன்று மாறியுள்ளது.
சுரு மற்றும் பலோடி போன்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. மற்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால், புழுதிப் புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது. தற்போதைய புழுதிப் புயல்கள் சூழ்நிலையின் காரணமாக தோன்றியுள்ளன.
உள் வெப்பம், ஈரப்பதம் நிலைகள் மற்றும் ஈரப்பதம் இல்லாத நிலை, வெப்பச்சலனம் போன்ற வானிலை நிலைகள் புழுதிப் புயல்களைத் தூண்டும். பெரும்பாலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புழுதிப் புயல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலைமைகள் 'லூ'வைத் தூண்டுகின்றன'' என்றார்.
'லூ' என்பது வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதியில் மேற்கிலிருந்து வீசும் ஒரு வலுவான, தூசி நிறைந்த, புயல், வெப்பமான, வறண்ட கோடைக் காற்றாகும்.
ராஜஸ்தான், ஹரியானா-சண்டிகர்-டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பாவில் அதிகபட்ச வெப்பநிலை 45-48 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருப்பதை ஐஎம்டி கவனித்தது. ஐஎம்டி தவறான வெப்பநிலை மதிப்பு குறித்து தெளிவுபடுத்தியுள்ளது
நாக்பூரில் எலக்ட்ரானிக் சென்சார்கள் செயலிழந்ததால், தவறான வெப்பநிலை மதிப்புகள் பதிவாகியிருப்பது குறித்தும் ஐஎம்டி விளக்கம் அளித்துள்ளது. நாக்பூரில் உள்ள ஒரு நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 56 டிகிரி செல்சியஸாகவும், மற்ற இரண்டு நிலையங்களில் 54.4 டிகிரி செல்சியஸ், 52.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.