
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜுன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஜுன் 2) உத்தரவிட்டது.
மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்கால ஜாமீன் முடிந்த நிலையில், இன்று மலை அவர் திகார் சிறையில் சரணடைந்தார்.
திகார் சிறைக்குச் சென்றதும், அவரை காணொலி வாயிலாக, விடுமுறைக்கால நீதிபதி நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்பு ஆஜர்படுத்தினர்.
கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த போது, மே 20ஆம் தேதி அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஜாமீன் முடிந்து வரும் கேஜரிவாலுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் கேஜரிவால் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜுன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சஞ்சீவ் அகர்வால் உத்தரவிட்டார். அன்றைய தினம் உடல்நலக் காரணங்களுக்காக அவர் தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜாமீன் மனு மீது சம்பந்தப்பட்ட நீதிபதி உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 21 நாள்கள் ஜாமீன் பெற்று மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தில்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், மும்பை, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜுன் 1ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், இன்று அவர் திகார் சிறையில் சரண் அடைந்தார்.
சிறைக்குச் செல்வதற்கு முன்பாக தனது தாய், தந்தையிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். குழந்தைகளை ஆரத்தழுவி பிரியாவிடை அளித்தார்.
அதோடு ராஜ்காட் மைதானத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் கேஜரிவால் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அனுமன் கோயிலில் மனைவி மற்றும் அமைச்சர்களுடன் சாமிதரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.