மோடி இதை ஒப்புக்கொள்ள வேண்டும்: சிறை செல்லும் முன்பு கேஜரிவால் பேச்சு

திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பு தனது பெற்றோரிடம் கேஜரிவால் ஆசி பெற்றார்.
மோடி இதை ஒப்புக்கொள்ள வேண்டும்: சிறை செல்லும் முன்பு கேஜரிவால் பேச்சு
Published on
Updated on
2 min read

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஜுன் 2) தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்கால ஜாமீன் முடிந்த நிலையில், திகார் சிறையில் இன்று அவர் சரணடையவுள்ளார்.

திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பு தனது பெற்றோரிடம் கேஜரிவால் ஆசி பெற்றார். ராஜ்காட் மைதானத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் ரோஸ் அவென்யூ சாலையிலுள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பெற்றோரிடம் ஆசி பெறும் அரவிந்த் கேஜரிவால்
பெற்றோரிடம் ஆசி பெறும் அரவிந்த் கேஜரிவால்
மோடி இதை ஒப்புக்கொள்ள வேண்டும்: சிறை செல்லும் முன்பு கேஜரிவால் பேச்சு
சரணடைவதற்கு முன்பு காந்திக்கு மரியாதை, அனுமன் கோயிலில் தரிசனம்!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அரவிந்த் கேஜரிவால், தேர்தலில் பிரசாரம் செய்ய ஏதுவாக 21 நாள்கள் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று மீண்டும் திகார் சிறைக்குச் செல்லவுள்ளேன். இந்த 21 நாள்களில் ஒரு நிமிடத்தைக் கூட நான் வீணாக்கவில்லை.

ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுக்காக மட்டும் பிரசாரம் செய்யவில்லை. கூட்டணியைச் சேர்ந்த மற்ற கட்சியினருக்காகவும் பிரசாரம் மேற்கொண்டேன். இதற்காக மும்பை, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களுக்குச் சென்றேன்.

ஆம் ஆத்மி எங்களுக்கு முக்கியமில்லை. எங்களுக்கு இந்த நாட்டின் நலனே முக்கியமானது. நான் மீண்டும் இன்று சிறைக்குச் செல்கிறேன். ஆனால், இது நான் செய்த குற்றங்களுக்காக அல்ல, ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக சிறை செல்கிறேன்.

கொள்ளையடிப்பதில் கேஜரிவால் அனுபவம் பெற்றவர் என்பதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என பிரதமர் மோடி ஒரு நேர்காணலில் கூறுகிறார். நான் கொள்ளையடிப்பதில் அனுபவம் வாய்ந்தவனாக இருப்பதாக வைத்துக்கொண்டால்கூட, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படாமல் அவர் என்னை சிறைக்கு அனுப்பலாமா?

என்னை கைது செய்வதன் மூலம், ஆதாரம் இல்லையென்றாலும், யாரை வேண்டுமானாலும் கைது செய்து சிறையில் அடைப்பேன் என்பதையே நாட்டு மக்களுக்கு மோடி தெரியப்படுத்துகிறார்.

என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதை நாட்டு மக்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என கேஜரிவால் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், அரவிந்த் கேஜரிவால் இன்று சிறைக்குச் செல்கிறார். அதற்கு முன்பாக மகாத்மா காந்திக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுதந்திரத்துக்குப் பிறகு தில்லி மக்களுக்காக உழைத்த முதல் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்தான் என்பது ஆம் ஆத்மியின் உறுப்பினர்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இதற்காக அவர் சர்வாதிகாரத்தால் தற்போது தண்டிக்கப்படுகிறார் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.