
பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுன் 4) தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அவர்களின் வெற்றி உறுதியாகியுள்ளதால், பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பை கொடுத்த மக்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். மோடியின் மீதும் மோடியின் திட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
2019ஆம் ஆண்டில் பாஜக மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை 2024-ல் காப்பாற்றியுள்ளோம். இந்த வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. அரசியலமைப்பின் மீது கொண்ட நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.
பாஜகவை வெற்றிபெற வைத்த ஒடிசா மக்களுக்கு நன்றி. வடக்கு முதல் தெற்கு வரை பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் விளைவே தேர்தலில் எதிரொலித்துள்ளது. தில்லி, ஹிமாசல், குஜராத்தில் மக்கள் எங்களை முழுவதுமாக ஆதரிக்கின்றனர் எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.