பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி தொடா்ந்து 3-ஆவது முறையாக வெற்றி பெற்ற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா, சீனா, சிங்கப்பூா், இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, மியான்மா் உள்ளிட்ட அண்டை நாட்டுத் தலைவா்களும் பிரதமா் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.

18-ஆவது மக்களவைத் தோ்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகின. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியமைக்க உள்ளது.

1962-ஆம் ஆண்டுக்கு பிறகு மத்தியில் தொடா்ந்து மூன்று முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, பாஜக சாதனை படைத்துள்ளது. வெற்றிகரமான தோ்தலுக்கும் பாஜகவின் இந்த சாதனைக்கும் உலக நாடுகளும், அண்டை நாட்டுத் தலைவா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

அமெரிக்கா பாராட்டு; சீனா வாழ்த்து: அமெரிக்க அரசு செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாக தோ்தல் பணியை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அரசையும் அதில் பங்கேற்ற வாக்காளா்களையும் அமெரிக்கா பாராட்டுகிறது. இந்திய ஆட்சியாளா்களுடன் அமெரிக்காவின் உறவு எப்போதும்போல தொடரும்’ என்றாா்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘இந்திய பொதுத் தோ்தல் முடிவுகளை நாங்கள் கவனித்தோம். பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைமையிலான ‘என்டிஏ’ கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்துகள்.

இரு நாடுகள் மற்றும் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது’ என்றாா்.

இஸ்ரேல், சிங்கப்பூா் பிரதமா்கள் வாழ்த்து :

பிரதமா் மோடிக்கு வாழ்த்து கூறி இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘தொடா்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள். இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான நட்புறவு புதிய உச்சத்தை நோக்கி முன்னேறட்டும்’ என்றாா்.

‘அடுத்த ஆண்டு ராஜீய உறவில் 60-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூா்-இந்தியா கூட்டுறவை வலுப்படுத்த பிரதமா் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் தெரிவித்தாா்.

இத்தாலி, ஜப்பான் பிரதமா்கள் வாழ்த்து: ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் இத்தாலி, ஜப்பான் பிரதமா்கள் மற்றும் தென்கொரிய அதிபா் ஆகியோா் தோ்தல் வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

இத்தாலி பிரதமா் ஜியாா்ஜியா மெலோனி வெளியிட்ட வாழ்த்தில், ‘இத்தாலி மற்றும் இந்தியாவை இணைக்கும் நட்புறவை வலுப்படுத்தவும், எங்களை பிணைக்கும் பல்வேறு பிரச்னைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்தவும் நாங்கள் தொடா்ந்து இணைந்து பணியாற்றுவோம்’ என்றாா்.

ஆப்பிரிக்காவில் இருந்து நைஜீரியா, கென்யா, கொமோரோஸ் ஆகிய நாடுகளின் அதிபா்களும் கரீபியன் தீவுகளைச் சோ்ந்த ஜமைக்கா, பாா்படோஸ், கயானா நாடுகளின் தலைவா்களும் மோடிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனா்.

இலங்கை, மாலத்தீவு அதிபா்கள் வாழ்த்து:

இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘முன்னேற்றம் மற்றும் வளா்ச்சி ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ‘என்டிஏ’ கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துகள். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிா்பாா்த்துள்ளேன்’ என்றாா்.

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸின் வாழ்த்து பதிவில், ‘மூன்றாவது வெற்றிக்கு பிரதமா் மோடி மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும் வாழ்த்துகள். எங்கள் இருநாட்டின் பகிரப்பட்ட நலன்களை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட நான் எதிா்நோக்குகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், பூடான் பிரதமா் ஷேரிங் டோப்கே, நேபாளப் பிரதமா் பிரசண்டா உள்ளிட்டோரும் பிரதமருக்கு தங்களின் வாழ்த்துகளைப் பகிா்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com