
அகமதாபாத்: ஊழல் செய்தாலும் லஞ்சம் பெற்றாலும் அதிலும் ஒரு கருணை இருக்க வேண்டும் என்று நினைத்தார் போல குஜராத் அரசு அதிகாரி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை மாதத் தவணையில் வாங்கும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொதுவாக அரசு அதிகாரிகளுக்கு இரக்கமே இருக்காது, கருணை காட்ட மாட்டார்கள் என ஏதேனும் ஒரு வேலைக்கு லஞ்சம் கொடுக்கும் ஏழை மக்கள் புலம்புவது உண்டு.
ஆனால், இங்கே, ஏழை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் லஞ்சப் பணத்தை மாதத் தவணையில் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொள்கிறார்கள் அரசு அதிகாரிகள், காவல்துறையினர். பெரிய தொகையை லஞ்சமாகக் கொடுக்க முடியாதவர்களிடம் சில நிதி நிறுவனங்களைப் போல கையெழுத்திட்ட காசோலையைப் பெற்றுக்கொண்டு மாதத் தவணையாகப் பெற்றுக் கொள்ளும் திட்டம் தற்போது உதயமாகியிருக்கிறது போல.
கடந்த மார்ச் மாதம், மாநில ஜிஎஸ்டி வரி வருவாய் மோசடி செய்த வழக்கில், ஒரு தனி நபரிடம் அரசு அதிகாரி ரூ.21 லட்சத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதனை அந்த நபர், ஒன்பது தவணைகளில் தலா ரூ.2 லட்சம் மற்றும் கடைசி தவணையில் ரூ.1 லட்சம் என வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் விவசாய நிலத்துக்கு அனுமதிச் சான்றிதழ் பெற சூரத்தில் தாலுகா பஞ்சாத்து உறுப்பினர் ரூ.85 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், விவசாயியிடம் அவ்வளவு பணம் இல்லாததால், நான்கு தவணைகளில் லஞ்சப் பணத்தைத் தர அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் 35 ஆயிரத்தையும் பிறகு பாக்கி தொகையை மூன்று தவணைகளில் தரவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்போரிடம் காவல்துறையினர் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு அதனை நான்கு தவணையாக பெற்றுள்ள சம்பவம் பற்றிய தகவலும் வெளியாகியிருக்கிறது.
மற்றொரு வழக்கில், ரூ.10 லட்சம் லஞ்சத்தை நான்கு தவணைகளில் அதிகாரிகள் பெற்றுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதுவரை 10 வழக்குகள் பதிவாகியுள்ளன என்கிறார்கள்.
வீடு, கார் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக பணம் கட்டி வாங்க முடியாதவர்கள் தவணை முறையில் வாங்குவார்கள். ஆனால் லஞ்சத்தையே தவணையாக கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது என்கிறார்கள் மூத்த அதிகாரிகள்.
ஏதேனும் பிரச்னையில் மாட்டி, காவல்நிலையம் அல்லது வரித்துறை போன்ற முக்கியத் துறை அலுவலகங்களுக்கு வருவோரிடம், வழக்கிலிருந்து காப்பாற்றுவதாகவும் அதற்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கேட்டு தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் திட்டம் அண்மைக்காலமான குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.