
தில்லிக்கு உபரிநீரை ஜூன் 7-க்குள் திறந்து விடுமாறு ஹிமாச்சல் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லிக்கு நீர் வருவதை உறுதி செய்ய ஹரியானா அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், தில்லி அரசு தண்ணீரை வீணாக்கக் கூடாது என்றும், இது தொடர்பான நிலை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஹிமாச்சலிலிருந்து 137 கன அடி உபரிநீரைத் திறந்து விட உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் ஹத்னிகுந்த் பகுதியிலிருந்து வாசிராபாத் பகுதி வரை உபரிநீர் தடங்கலின்றி தில்லி வரை செல்வதை உறுதி செய்யுமாறு ஹரியானா அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், ஹிமாச்சலில் திறந்து விடப்படும் நீர் அளவைக் கணக்கிடுமாறு மேல் யமுனை நதி வாரியத்திடம் கூறியுள்ளது.
ஹிமாச்சல் அரசுக்கு நீரைத் திறந்து விடுவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று விடுமுறை கால உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் குறிப்பிட்டனர்.
தில்லி அரசு அங்கு நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் குறைக்க ஹிமாச்சலில் இருந்து வரும் உபரிநீரைத் திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் இன்று உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளகளுடன் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் , “தில்லிக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு 1993-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு பிறகு தில்லியின் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துள்ள போதும் தண்ணீர் அதே அளவிலேயே வழங்கப்படுகிறது.
நான் இருமுறை ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தரை சந்தித்து தில்லிக்கு தண்ணீர் வழங்கக் கோரிக்கை வைத்த போதும் அவர் தண்ணீர் வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், ஹரியானா அரசு அதனை சரியாக வழங்குவதில்லை.
ஹிமாச்சல் அரசு தில்லிக்கு வழங்கும் தண்ணீரை மட்டுமாவது எங்களுக்கு கொடுத்துவிடுங்கள். நாங்கள் ஹரியானா பாஜக அரசிடம் கேட்பது இது ஒன்றுதான். ஆனால், தண்ணீருக்கு வழி விடமாட்டோம் என ஹரியானா பாஜக அரசு கூறுகிறது. உச்சநீதிமன்றம் கூறும் முன்னரே மத்திய பாஜக தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தண்ணீரைப் பெற்றுத் தந்திருக்க வேண்டாமா?
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கும், ஹிமாச்சல் அரசுக்கும் எனத்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.