
புது தில்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது குறித்து அறிக்கை கேட்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 4ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அன்றைய தினம், பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் நட்டம் அடைந்தனர்.
இது குறித்து விளக்கம் கேட்கவும் மத்திய அரசு மற்றும் செபி அமைப்புகள் பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதானி - ஹின்டென்பர்க் வழக்கில், இடையீட்டு மனுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் விஷால் திவாரி தாக்கல் செய்திருக்கும் மனுவில், அதானி - ஹின்டென்பர்க் விவகாரத்தில் செபி விசாரணையை நடத்தி முடித்திருக்கிறதா, இது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கும் வழக்குரைஞர் விஷால் திவாரி, ஊடகங்களில் வெளியான தகவல்களை மேற்கோள்காட்டி, அன்றைய நாளில் ஏற்பட்ட வீழ்ச்சி 20 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, அதானி - ஹிடென்பர்க் விவகாரத்தில் எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்பட்டிருப்பதால் சந்தேகங்கள் வலுக்கிறது. நீதிமன்ற எச்சரிக்கை உத்தரவுக்குப் பிறகும் எதுவும் மாறவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வெளியான வாக்கு கணிப்புகளுக்குப் பின் பங்குச் சந்தை எழுச்சி அடைந்ததும், ஆனால், அதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்தபோது வீழ்ச்சி அடைந்ததும் கவனிக்கப்பட வேண்டியது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.