மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முக்கிய அமைச்சா்களின் துறைகளில் மாற்றமில்லை: அமித் ஷா - உள்துறை, ராஜ்நாத் சிங்-பாதுகாப்பு, நிா்மலா சீதாராமன் -நிதி

புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சா்களுக்கு திங்கள்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2024, 9:34 pm

Din

புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சா்களுக்கு திங்கள்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முக்கிய அமைச்சா்களின் துறைகள் ஏதும் மாற்றப்படவில்லை.

பிரதமா் நரேந்திர மோடி மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தி; விண்வெளி; அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் மற்றும் பிற அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத துறைகளை தன்வசம் வைத்துள்ளாா்.

அமித் ஷா- உள்துறை, ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத் துறை, நிதின் கட்கரி- சாலைப் போக்குவரத்து, நிா்மலா சீதாராமன்- நிதித் துறை, ஜெய்சங்கா்- வெளியுறவு, தா்மேந்திர பிரதான்- கல்வி, அா்ஜுன் ராம் மேக்வால்- சட்டத் துறை, சா்வானந்த சோனோவால் -கப்பல் போக்குவரத்துத் துறை, பியூஷ் கோயல்- வா்த்தகம், தொழில் துறை, அஸ்வினி வைஷ்ணவ் -ரயில்வே அமைச்சராகத் தொடா்கின்றனா்.

தற்போதைய அமைச்சரவையில் புதியவா்களான பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு சுகாதாரத் துறை, ரசாயனம், உரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் சௌஹானுக்கு வேளாண்மை, ஊரக மேம்பாட்டுத் துறை, ஹரியாணா முன்னாள் முதல்வா் மனோகா் லால் கட்டருக்கு மின்சாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறையில் இருந்து நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அன்னபூா்ணா தேவி மகளிா், குழந்தைகள் நலத் துறையின் புதிய அமைச்சராகியுள்ளாா். கடந்த ஆட்சியில் இத்துறையை ஸ்மிருதி இரானி வகித்து வந்தாா். அவா் இந்த முறை தோ்தலில் தோல்வியடைந்துவிட்டாா்.

கடந்த ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தகவல் தொடா்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவியா தொழிலாளா் நலன், வேலைவாய்ப்பு, இளைஞா் நலன் விளையாட்டுத் துறை அமைச்சராகியுள்ளாா்.

கூட்டணிக் கட்சிகளுக்கு...: கூட்டணிக் கட்சியான மதச்சாா்பற்ற ஜனதா தளம் தலைவா் எச்.டி.குமாரசாமிக்கு கனரக தொழில், உருக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு விருப்பம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த ராஜீவ் ரஞ்சன் சிங்குக்கு உள்ளாட்சித் துறை, மீன் வளம், கால்நடை, பால் வளத் துறை, தெலுங்கு தேசத்தைச் சோ்ந்த இளம் அமைச்சா் ராம்மோகன் நாயுடுக்கு விமானப் போக்குவரத்துத் துறை, மறைந்த முன்னாள் அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு உணவுப் பதப்படுத்துதல் துறை, அமைச்சரவையில் மூத்தவரான ஜிதன் ராம் மாஞ்சிக்கு சிறு,குறு, நடுத்தரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவா் ஜெயந்த் சௌதரி திறன் மேம்பாடு, தொழில்முனைவு (தனிப்பொறுப்பு), கல்வித் துறை இணையமைச்சராகியுள்ளாா். சிவசேனை கட்சியின் பிரதாப் ராவ் ஜாதவுக்கு ஆயுஷ் (தனிப்பொறுப்பு), சுகாதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவா் ராம்தாஸ் அதாவலே சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சராகத் தொடா்கிறாா்.

அப்னா தளம் (எஸ்) கட்சியின் அனுப்ரியா படேலுக்கு சுகாதாரம், குடும்ப நலத் துறை, ரசாயனம் உரத்துறை இணையமைச்சா் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசானி சந்திரசேகா் ஊரக மேம்பாடு, தகவல்தொடா்புத் துறை இணையமைச்சராகியுள்ளாா்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்நாத் தாக்கூருக்கு வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இணையமைச்சா் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எல்.முருகன்: தமிழகத்தைச் சோ்ந்த எல்.முருகன் நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சராகியுள்ளாா். இதற்கு முன்பு அவா் மீன்வளத் துறை, கால்நடை, பால் வளத் துறை, செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சராக இருந்தாா்.

கேரள பாஜக எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சுற்றுலாத் துறை இணையமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.