
தில்லி விமான நிலையத்துக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், மிரட்டல் விடுத்தவரைத் தேடிய காவல்துறையினருக்குக் கிடைத்திருப்பதோ 13 வயது சிறுவன்.
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், தன்னை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்கவே, தான் இவ்வாறு செய்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன், விசாரணைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி தில்லி சர்வதேச விமான நிலைய அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், விரைவில் புறப்படவிருக்கும் ஏர் கனடா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. சோதனையில் மின்னஞ்சல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இந்த புரளி காரணமாக, 301 பயணிகளும் 16 பணியாளர்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, விமானம் தொலைவான இடத்தில் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. பிறகுதான் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில், மிரட்டல் விடுக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் அந்த மின்னஞ்சல் உருவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அந்த மின்னஞ்சல் வந்த முகவரி, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் என்பதும், அதனை அனுப்பியது சிறுவன் என்பதும் தெரிய வந்தது.
முன்னதாக, மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தொலைக்காட்சிகளில் செய்தியைப் பார்த்து தானும் ஏன் இப்படி செய்யக் கூடாது, தன்னை காவல்துறை கண்டுபிடிக்குமா? என நினைத்து இவ்வாறு மின்னஞ்சல் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.