மதுபான ஆலையில் மீட்கப்பட்ட 39 குழந்தைத் தொழிலாளர்களைக் காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு!
மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்திலுள்ள மதுபான ஆலையில் நேற்று (ஜூன் 15) தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நடத்திய சோதனையில் 39 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் பின்னர் காணாமல் போனதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளர்கள் பலரும் பதின்வயதினர் என்றும், அதில் பல பெண்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் கைகளில் தீக்காயங்கள் இருந்ததாகவும், அவை அங்குள்ள ரசாயனங்களால் ஏற்பட்டதாகவும் என்சிபிசிஆர் குழுவினர் தெரிவித்தனர்.
”இந்த மதுபான ஆலையில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, 15-16 மணி நேரம் வேலை வாங்குவதாக தகவல் கிடைத்தவுடன், எஸ்ஓஎம் ஆலையில் எங்கள் குழுவினருடன் சோதனையிட வந்தோம். சோதனையில், இங்கு வேலை பார்த்து வந்த குழந்தைகளை மீட்டு நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம்” என்று என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்தார்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “ரைசென் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது என் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து, தொழிலாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து விரிவான தகவல்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கிருந்து மீட்கப்பட்டு காவலில் இருந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் காணாமல் போனதாக இன்று என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “நேற்று ரைசென் மாவட்டத்தில் எஸ்.ஓ.எம். மதுபான ஆலையில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை நேற்றிரவு முதல் காணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “நேற்று சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர்கள் நிறுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன. ஆனால், மாஜிஸ்திரேட் வருவதற்கு 7 மணி நேரம் ஆனது. இரவு நேரம் ஆனதால், அதனைப் பயன்படுத்தி அனைத்துக் குழந்தைத் தொழிலாளர்களையும் எங்கு கூட்டிச் சென்றனர் என்று தெரியவில்லை. அவர்கள் கடத்தப்பட்டனரா, காணாமல் போனார்களா என்றும் தெரியவில்லை.
காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு அரசு அதிகாரி ஒருவரை இந்த சம்பவம் காரணமாக முதல்வர் பணியிடைநீக்கம் செய்துள்ளார். அனைத்து அதிகாரிகளும் காணாமல் போன குழந்தைத் தொழிலாளர்களைத் தேடி வருகின்றனர்” என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.