
பிரியங்கா காந்தியின் வருகை மக்களவையில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு பொறுப்பை ராஜிநாமா செய்வதாக இன்று (ஜூன் 17) அறிவித்தார். அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடவுள்ளார்.
கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர், பாணக்காடு செய்யத் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பிரியங்கா காந்தி கேரளத்துக்கு வந்தால், ஐக்கிய ஜனநாயக முன்னணி மிகப்பெரிய அளவில் பலம் பெறும். நாடாளுமன்றத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு கடினமான சூழல்களை ஏற்படுத்தும். வயநாட்டில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவார் எனக் கூறினார்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று (ஜூன் 17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் கலந்து பேசி, வயநாடு தொகுதியில் (ராகுல்) ராஜிநாமா செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். தனது இடத்தில் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.