எதிரி யார்? காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும் - ஆனி ராஜா

வகுப்புவாத - பாசிச சக்தி மிகப்பெரிய எதிரியா? அல்லது இடதுசாரி கட்சிகள் தங்கள் எதிரியா? காங்கிரஸுக்கு கேள்வி
ஆனி ராஜா
ஆனி ராஜாகோப்புப் படம்

வகுப்புவாத - பாசிச சக்தி தங்கள் மிகப்பெரிய எதிரியா? அல்லது இடதுசாரி கட்சிகள் தங்கள் எதிரியா? என்பதை காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவருமான ஆனி ராஜா இன்று (ஜூன் 18) தெரிவித்தார்.

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தனது பொறுப்பை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அவரின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து பிடிஐ ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஆனி ராஜா, ’’வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு. அவர்களின் முடிவுக்கு மதிப்பளிக்கிறேன்.

ஐக்கிய ஜனநாயக முன்னணி பெண் வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அனைத்துக் கட்சிகளும் இது குறித்து கவலையுற வேண்டும். காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளரை அறிவித்துள்ளது. இதனை வரவேற்கிறேன்.

ராகுல் காந்தி போட்டியிடும்போதும் இக்கேள்வியை எழுப்பினேன். தற்போது மிகுந்த மரியாதையுடன் பிரியங்காவிடமும் இக்கேள்வியை முன்வைக்கிறேன். யார் உங்களின் மிகப்பெரிய எதிரி? வகுப்புவாத - பாசிச சக்தியா? அல்லது இடதுசாரி கட்சிகளா?

ஐக்கிய ஜனநாயக முன்னணியிலுள்ள ஒவ்வொரு கட்சியும் இந்தியா கூட்டணியின் அங்கம். பிரியங்கா காந்தியும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்தான். அந்தத் தலைவர் கூட்டணியைச் சேர்ந்தவர்களுடனேயே போட்டியிடுகிறார்.

இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கேரளத்தில் போட்டியாளர்கள். அதேநேரத்தில் அவை இரண்டும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவை.

அதனால் தங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய எதிரி யார் என்பதை காங்கிரஸ் கட்சியும், பிரியங்கா காந்தியும், தெளிவுபடுத்த வேண்டும்.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகும்போது, இது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் அல்ல, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என சிபிஐ முன்பு கணித்திருந்தது.

ஆனி ராஜா
நீட் முறைகேடு: வழக்கம்போல மௌனம் காத்து வருகிறார் மோடி! ராகுல் விமர்சனம்

வகுப்புவாதம், பாசிசத்துக்கு எதிராக காங்கிரஸும் இடதுசாரிகளும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினோம். தனித்து நின்று அவர்களை (பாஜக) தோற்கடிப்பது கடினம். இதன் காரணமாகவே இடதுசாரிகளும், ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைந்தன.

இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே சிபிஐ பணிகளை மேற்கொண்டது. இந்தியா கூட்டணி பலவீனமடையும் எந்த செயலையும் சிபிஐ செய்ததில்லை எனக் கூறினார்.

ஜூலை மாதம் எங்கள் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு கேரள தலைமையிலான கூட்டம் நடைபெறும். இதில் ஆலோசித்து எங்கள் முடிவுகளை அறிவிப்போம் எனக் குறிப்பிட்டார் ஆனி ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com