
கடந்தாண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), பள்ளிப் பாடத்தை திருத்தியமைப்பதற்கு அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு அனைத்து வகுப்புப் பாடப்புத்தகத்திலும் உள்ள ‘இந்தியா’ என்ற வார்த்தையை ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைத்தது. இது அனைத்துத் தரப்புகளிலும் விவாதங்களைத் தூண்டியது.
இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு கேரள அரசு கோரிக்கை வைத்தது.
தற்போது, இந்தியா - பாரத் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரான ஜக்கி வாசுதேவ் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
”ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறியதும் நாம் பாரத் என்னும் பெயரை மீட்டிருக்க வேண்டும். ஒரு பெயரால் எதுவும் ஆகிவிடாது. ஆனால், பல கோடி இதயங்களிலும் எதிரொலிக்கும் வகையில் ஒரு நாட்டின் பெயர் இருப்பது முக்கியம். நமது நாடு நமக்கு எல்லாமுமாக இருந்தாலும், இந்தியா என்ற வார்த்தையில் எந்த அர்த்தமுமில்லை.
தேசத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றமுடியாவிட்டாலும், ‘பாரத்’ என்ற பெயரை நாம் தினசரி பேச்சுவழக்கில் கொண்டு வரவேண்டிய நேரமிது. இந்தியா பிறப்பதற்கு பலகாலம் முன்னரே பாரத் இங்கு இருந்தது என்பதை இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டு என்சிஇஆர்டி-யைப் பாராட்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, என்சிஇஆர்டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி பேசுகையில், “பாரத் மற்றும் இந்தியா என்ற சொற்கள் நாட்டின் அரசியலமைப்பில் உள்ளதைப் போலவே என்சிஇஆர்டி பாடநூல்களிலிலும் பயன்படுத்தப்படும். அரசியலமைப்பில் கூறுவது போலவே நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
நாம் பாரத் என்றும், இந்தியா என்றும் பயன்படுத்தலாம். அதற்கான விவாதம் இங்கு இல்லை. இந்தியாவோ, பாரத்தோ எது எங்கு பொருத்தமாக இருக்குமோ அதைப் பயன்படுத்துவோம். இந்தியாவின் மீதோ, பாரத்தின் மீதோ எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை” என்று அவர் கூறினார்.
மேலும், ”பாடநூல்களில் இரண்டையும் ஏற்கனவே பயன்படுத்தியிருப்பதை நீங்கள் காணலாம். புதிய பாடநூல்களிலும் இது தொடரும். இது ஒரு பயனற்ற விவாதம்,' என்று சக்லானி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.