
மேற்கு வங்க மாநிலம் புதிய ஜல்பைகுரி அருகே திங்கள்கிழமை காலை நேரிட்ட ரயில் விபத்தில், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 88 குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் பக்ரீத் கொண்டாட்டத்தையே தள்ளிவைத்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதன் மூலம் பக்ரீத் நாளன்று, குர்பானிக்கு ஒரு புதிய அர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் சோட்டா நிர்மல் ஜோட் கிராம மக்கள் என்று சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
சோட்டா நிர்மல் ஜோட் கிராமத்தில் 88 குடும்பத்தினர் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். திங்கள்கிழமை காலை, பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட அனைவரும் தயாராகிக் கொண்டிருந்த போதுதான், யாரும் எதிர்பாராத அந்த துயர விபத்து நேர்ந்தது.
மேற்கு வங்கத்தின் டாா்ஜீலிங் மாவட்டத்தில் புதிய ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதிய விபத்தில், பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் செய்தி அறிந்ததும், அந்தக் கிராம மக்கள் அனைவரும் தங்களது கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு, ஒன்றாக சேர்ந்து ரயில் விபத்தில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் பணியில் இறங்கிவிட்டனர். மீட்புப் பணிகள் முழுமையாக நடந்து முடிந்தபிறகே அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில், தாங்கள் திங்கள்கிழமை நிறுத்திவைத்திருந்த பக்ரீத் பண்டிகையை ஒன்றாக சேர்ந்து செவ்வாயன்று கொண்டாடினார்கள். குர்பானி கொடுத்து பக்ரீத் பண்டிகையை நிறைவு செய்தார்கள்.
காலையில் எழுந்து நமாஸ் தொழுகையில் ஈடுபட்டிருந்த அவர்கள், விபத்து குறித்து அறிந்ததுமே அனைத்து கொண்டாட்டங்களையும் நிறுத்திவிட்டு நேராக விபத்துப் பகுதிக்குச் சென்றுவிட்டிருக்கிறார்கள். அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை வெளியே எடுத்துப் போடுவது, பயணிகளை பத்திரமாக வெளியே கொண்டு வர மீட்புப் படையினருக்கு உதவுவது, ஆம்புலன்ஸில் பாதிக்கப்பட்டவர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று அவர்களை அங்கே அனுமதிப்பது என பரபரப்பாக இருந்துள்ளனர். அவர்களில் 12 இளைஞர்கள் ஒரு குழுவா இருந்து பலரையும் காக்க போராடியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மன நிறைவோடு, நேற்று வெள்ளை நிற ஆடை அணிந்துகொண்டு தங்களது குடும்பத்துடன் பக்ரீத் கொண்டாடியதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களையும் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துத் திரும்பியிருக்கிறார்கள்.
ரயில் பெட்டிகளை உடைத்தபோது, எங்கள் உடல்களிலும் காயங்கள் ஏற்பட்டன. அவற்றை உடைக்க எங்களிடம் போதிய கருவிகள் இல்லை. எனினும் எப்படியோ பலரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தோம். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம் என்ற மன நிறைவோடு பக்ரீத் கொண்டாடுகிறோம் என்கிறார்கள் இளைஞர்கள் ஒருமித்த குரலில்.
திங்கள்கிழமை, மருத்துவமனைக்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்களை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.