
சிலிகுரி: மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில், உயிரிழந்த ரயில் ஓட்டுநரை விசாரணைக்கு முன்னரே குற்றம் சாட்டுவதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் உறவினர்கள்.
விபத்தில் இறந்துவிட்ட மற்றும் தன்னை குற்றச்சாட்டிலிருந்து தற்காத்துக்கொள்ள இயலாத ஒருவர் மீது ரயில்வே எவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்பது குறித்து சட்டரீதியாக போராட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள் அவர்கள்.
மேற்கு வங்கத்தின் டாா்ஜீலிங் மாவட்டத்தில் புதிய ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதிய விபத்தில், பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் சரக்கு ரயில் ஓட்டுநரே, சிவப்பு சிக்னல்களை மதிக்காமல் ரயிலை இயக்கி விபத்துக்குக் காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், முதற்கட்ட விசாரணையில், ரங்கபாணி ரயில் நிலையத்துக்கும் சத்தர் ஹட் ரயில்வே சந்திப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படாமல் இருந்துள்ளது. இதற்கிடையேதான், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் சிக்னல் எல்லைக்குட்பட்ட பகுதியை கடக்கும் முன்பே, பயணிகள் ரயிலுக்கு பின்னால் வந்த சரக்கு ரயில் அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடந்து செல்வதற்கான எழுத்துப்பூர்வ அனுமதியை ரங்கபாணி ரயில்நிலயை அதிகாரி வழங்கியிருப்பது ரயில்வே ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால்தான், சரக்கு ரயில் ஓட்டுநர் சிவப்பு சிக்னலை பொருட்படுத்தாமல் ரயிலை தொடர்ந்து இயக்கியிருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெளிவுபடுத்தியிருந்தன.
இந்த விபத்தில், விசாரணை தொடங்கும் முன்னரே சரக்கு ரயில் ஓட்டுநர் அனில் குமார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நாங்கள் இன்னமும் அனில் குமார் இழப்பிலிருந்து வெளியே வர முடியாமல் கலங்கி நிற்கிறோம். அதற்குள் அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருப்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அதிர்ச்சியில் உள்ளோம். ஒட்டுமொத்த சம்பவத்துக்கும் எனது உறவினரையே குற்றவாளியாக்கப் பார்க்கிறது ரயில்வே என்று உறவினர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது என்று தெரிந்தும், எவ்வாறு அவர் மீது குற்றம்சாட்ட முடியும்? இந்தக் குற்றச்சாட்டுகளுடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் எவ்வாறு இந்த சமூகத்தில் வாழ முடியும்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்கள் அவர்களது உறவினர்கள்.
இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு சட்ட ரீதியாக இதனை எப்படி எதிர்கொள்வது என்று நாங்கள் முடிவு செய்வோம். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் நிலையில் இப்போது நாங்கள் இல்லை. எங்களது உறவினர் ஒருவர், மிகக் கொடுமையான ரயில் விபத்தில் பலியாகியிருக்கிறார், அதிலிருந்தே எங்களால் இன்னமும் வெளியே வர முடியவில்லை. இந்த நிலையில் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை என்கிறார்கள்.
அனில் குமார் (46) தனது மனைவி ரோஷினி மற்றும் மகன்களுடன் புதிய ஜல்பைகுரியில் வாழ்ந்து வந்தார். இந்த விபத்து குறித்து மட்டும்தான் ரோஷினிக்கு உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அனில் குமார் இறப்பு பற்றி மனைவிக்குத் தெரிவிக்கவில்லை. அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றுதான் சொல்லிவைத்திருந்தனர். பிறகு, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்குக் கொண்டு வந்த போதுதான் அவர இறந்துவிட்டதே ரோஷினிக்குத் தெரியவந்திருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டு கால பணிக் காலத்தில் அனில் குமார் மீது எந்த புகாரும் இருக்கவில்லை. இதுபோன்றவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பது ஏற்புடையது அல்ல, உதவி ஓட்டுநராக பணியைத் தொடங்கி தற்போது ரயில் ஓட்டுநராக பதவி உயர்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ரங்கபாணி அருகே திங்கள்கிழமை தண்டவாளத்தில் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் விரைவு ரயிலின் பின்புற 4 பெட்டிகள் கடும் சேதமடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.