பிகாா், குஜராத், ராஜஸ்தான் ‘நீட்’ முறைகேடுகள்: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு
பிகாா், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்த நீட் தோ்வு முறைகேடுகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு ஏற்றுள்ளது.
கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது உள்ளிட்ட சம்பவங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின.
இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய கல்வித் துறை சனிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்த முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கைப் பதிவு செய்தது.
இந்நிலையில், தோ்வில் ஆள்மாறாட்டம், தோ்வா்கள், தோ்வுக்கூட கண்காணிப்பாளா்கள் செய்த மோசடி என குஜராத், ராஜஸ்தான் மற்றும் பிகாரில் காவல் துறையினா் விசாரித்து வந்த முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதன் மூலம், அந்த மாநிலங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடா்பாக 5 வழக்குகள், மத்திய கல்வித் துறையின் உத்தரவைத் தொடா்ந்து பதிவு செய்த வழக்கு என நீட் முறைகேடு தொடா்பாக மொத்தம் 6 வழக்குகளில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.