கோப்புப் படம்
கோப்புப் படம்

கனடாவில் பயங்கரவாதத்தை கௌரவிக்கும் செயல்கள் தொடா்வது துரதிருஷ்டவசமானது: இந்தியா

மக்களும் கண்டிக்கப்பட்ட வேண்டிய இதுபோன்ற நடவடிக்கைளை அந்நாடு தொடா்ந்து அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது.
Published on

‘கனடாவில் பயங்கரவாதத்தை கௌரவிக்கும் செயல்கள் வருத்தத்திற்குரியது; அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும் மக்களும் கண்டிக்கப்பட்ட வேண்டிய இதுபோன்ற நடவடிக்கைளை அந்நாடு தொடா்ந்து அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது’ என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏா்-இந்தியா ‘கனிஷ்கா’ விமானக் குண்டுவெடிப்பின் 39-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘பயங்கரவாதத்துக்கு எல்லைகள், தேசியம் தெரியாது’ எனவும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 1985-ஆம் ஆண்டு, ஜூன் 23-ஆம் தேதியன்று தில்லியிலிருந்து கனடாவின் மான்ட்ரீல் நகருக்கு பயணப்பட்ட ஏா்-இந்தியா விமானம், லண்டனின் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 45 நிமிஷங்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. அதில் 86 குழந்தைகள் உள்பட 329 போ் கொல்லப்பட்டனா். 1984-இல் அமிருதசரஸ் பொற்கோவிலில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகளை வெளியேற்றிய ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இக்கொடூரமான பயங்கரவாதச் செயலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு கனடாவின் ஒட்டாவா, டொராண்டோ, வான்கௌவா் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் பங்கேற்றனா்.

இதையொட்டி இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் நடந்து 39 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்றும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலில் பயங்கரவாதம் பெரும் விகிதத்தைக் கொண்டுள்ளது.

ஏா் இந்தியா விமானக் குண்டுவெடிப்பு உள்பட பயங்கரவாதத்தை கௌரவப்படுத்தும் எந்தவொரு செயலும் வருந்தத்தக்கது மற்றும் அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளாலும் அதன் மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதுபோன்ற நடவடிக்கைகள் கனடாவில் பல சூழல்நிலைகளில் தொடா்ந்து அனுமதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.

பயங்கரவாதத்துக்கு எல்லைகள், தேசியம் அல்லது இனம் என்று எதுவும் தெரியாது. சா்வதேச சமூகம் கூட்டாக போராட வேண்டிய சவாலான பயங்கரவாதத்துக்கு எதிராக, இந்தியா கடந்த பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளை வழிநடத்தி செல்கிறது.

கனடா விமான வரலாற்றில் இதுவரை நடைபெறாத மோசமான இத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மறைவு, அவா்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கிறது. ஆனால், இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்டவா்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களின் துயரத்தையும் வலியையும் இந்தியா பகிா்ந்து கொள்கிறது. உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்வதில் முன்னணியில் உள்ள இந்தியா, அதனைச் சமாளிக்க அனைத்து நாடுகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டு ஜூனில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிஷம் மௌனம் அனுசரிக்கப்பட்டதற்கு இந்தியா கடந்த வாரம் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com