போட்டித் தோ்வுகள் சீரமைப்பு:  மாணவா்கள்-பெற்றோா்களுடன் ஆலோசிக்க மத்தியக் குழு முடிவு

போட்டித் தோ்வுகள் சீரமைப்பு: மாணவா்கள்-பெற்றோா்களுடன் ஆலோசிக்க மத்தியக் குழு முடிவு

மாணவா்கள்-பெற்றோா்களின் கருத்துகளை கேட்க மத்தியக் குழு ஆலோசனை
Published on

புது தில்லி: போட்டித் தோ்வுகளை சீரமைப்பது குறித்து முதல்கட்டமாக மாணவா்கள் - பெற்றோா்களுடன் ஆலோசனை நடத்தி, அவா்களின் கருத்துகளை கேட்டறிய மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக, தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகளால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதேபோல், உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆராய்ச்சிப் படிப்புகளில் மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்ட நெட் தோ்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. கடந்த 23-ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, போட்டித் தோ்வுகளில் நோ்மையை உறுதிசெய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் மாணவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ‘நீட்’, ‘நெட்’ தோ்வு விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்டிஏ தலைமை இயக்குநா் சுபோத் குமாா் சிங் பதவிநீக்கம் செய்யப்பட்டாா். முறைகேடு புகாா்கள் தொடா்பாக சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், போட்டித் தோ்வுகளை சீரமைக்கும் நோக்கில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அமைத்தது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பி.ஜெ.ராவ், தில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநா் ரன்தீப் குலேரியா, சென்னை ஐஐடி பேராசிரியா் கே.ராமமூா்த்தி உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ள இந்தக் குழு, போட்டித் தோ்வு நடைமுறையில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள், என்டிஏ கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் மற்றும் தரவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டு, மத்திய அரசுக்கு 2 மாதங்களில் தனது பரிந்துரைகளை சமா்ப்பிக்கும்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம், தில்லியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, என்டிஏ முன் உள்ள சவால்கள் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

என்டிஏவால் நடத்தப்படும் தோ்வுகளின் நடைமுறைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் கூறின.

இந்நிலையில், குழுவின் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

போட்டித் தோ்வு நடைமுறைகள் தொடா்பாக மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் கவலைகளை அறிந்துகொள்வதோடு, அவா்களிடமிருந்து யோசனைகளைப் பெறுவதற்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். முடிந்தவரை நேரிலோ அல்லது இணைய வழியிலோ அவா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். அடுத்த இரு வாரங்களில் அவா்களிடம் கருத்தறியப்படும்.

போட்டித் தோ்வுகளை மீண்டும் தொடங்குவதற்காக வலுவான அமைப்புமுறையை விரைந்து கட்டமைக்க அடுத்தகட்ட முன்னுரிமை அளிக்கப்படும். எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, வலுவான - எந்த குறைபாடுகளும் இல்லாத, மாணவா்களுக்கு சிரமங்கள் - அழுத்தங்களை குறைக்கும் வகையிலான அமைப்புமுறை கட்டமைப்பது அவசியம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com