
மாலத்தீவு அதிபர் மொகம்மது மூயிஸ்ஸுக்கு சூன்யம் வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், மாலத்தீவு அமைச்சர்கள் இரண்டு பேர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாலத்தீவில், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு சூன்யம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜூன் 23ஆம் தேதி மாலத்தீவின் அமைச்சர்கள் ஃபாத்திமா ஷம்நாஸ் அலி சலீம், ஆதம் ரமீஸ் ஆலி ஆகியோருடன், வேறு இரண்டு பேரையும் மாலத்தீவு காவல்துறை கைது செய்தது. இவர்கள் மீது அதிபருக்கு சூனியம் வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாலத்தீவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் ஃபாத்திமா ஷம்நாஸ் அலி சலீம், இவரது முன்னாள் கணவர் ஆதம் ரமீஸ் அதிபர் அலுவலக விவகாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர்கள் இருவரும்தான் தற்போது கைதாகியிருக்கிறார்கள்.
பில்லி-சூனியம் தொடர்பான சில நடவடிக்கைகள் அதிபர் அலுவலகத்தில் காணப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த விதமான தடயங்களை அடிப்படையாக வைத்து சூனியம் வைக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது. ஆனால், இந்த செய்தி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
மாலத்தீவு அரசியல் வட்டாரத்தில், கைது செய்யப்பட்டிருக்கும் இரு அமைச்சர்களுமே மிகவும் முக்கியமானவர்கள், ஏற்கனவே மாலேவின் மேயராக மொகம்மது மூயிஸ் பதவி வகித்தபோது, ஃபாத்திமா உடன் பணியாற்றியிருக்கிறார். பிறகு, மொகம்மது மூயிஸ் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபரான போது ஃபாத்திமா, சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
மேலும், மொகம்மது மூயிஸ்-க்கு நெருங்கிய உதவியாளராக ஆதம் ரமீஷ் இருந்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக, மொகம்மது பங்கேற்ற பொது நிகழ்ச்சிகள் எதிலும் ஆதம் பங்கேற்காமல் இருந்தது, அரசியல் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் கைதாகியிருக்கிறார்கள்.
அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
இந்த கைது நடவடிக்கைக்கு முன்பு, தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜூன் 23ஆம் தேதி, அமைச்சர்களுடன் அடையாளம் கூறப்படாத இருவர் கைதாகியிருக்கிறார்கள். இவர்கள் 7 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, இந்த நிலையில்தான், கடந்த 27ஆம் தேதி அமைச்சர்கள் ஷம்நாஸ் மற்றும் ரமீஸ் ஆகியோர் அவர்களது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், மாலத்தீவு மக்களிடயே இருவேறு விதமான கருத்துகளை ஏற்படுத்தியிருக்கிறது, சிலர் அதிபருக்கே சூனியமா என்றும், இதெல்லாம் நம்பி கைது செய்வதா என்றும் கருத்துகளை கூறி வருகிறார்கள். பில்லி, சூனியம் போன்றவை பல மதங்களிலும் பல்வேறு விதங்களில் பின்பற்றப்பட்டு வரும் பழைய நம்பிக்கை. இதனை மூட நம்பிக்கை என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு அதிபருக்கு சூனியம் செய்ய முயற்சி நடந்திருக்கிறது என்றால், அது எதற்காக? அரசியல் ரீதியானதா? அல்லது ஆட்சியைக் கைப்பற்றுவதற்கா? என்றெல்லாம் கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, பதவிகள் பறிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாலத்தீவு அதிபர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. மௌனமாகவே இருந்து வருகிறார். இது தொடர்பான விவாதங்களை மக்களிடமே விட்டுவிட்டுள்ளது அதிபர் அலுவலகம். அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராததால், இது தொடர்பான பல உறுதி செய்யப்படாத தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியிருக்கிறது.
சுற்றுலாவை அதிகம் நம்பியிரிக்கும் நாடு மாலத்தீவு. சுற்றிலும் அமைதியான கடற்கரைப் பகுதிகளைக் கொண்டிருக்கும் மாலத்தீவு தற்போது ஒரு விநோதமான அரசியல் போக்கை எதிர்நோக்கியிருக்கிறது. விசாரணை நடைபெற்று வரும் விதம் குறித்து சர்வதேச நாடுகளும் கவனித்து வருகிறது. அதேவேளையில், இந்த வழக்கில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள அதிகாரிகளுக்கு வெளியிலிருந்து அழுத்தம் வரப்பெறலாம். ஆனால் அவ்வாறு அவர்களால் நடந்து கொள்ள முடியாமல் உள்விவகாரங்கள் காரணமாக அமையலாம். விசாரணை முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே மாலத்தீவின் அரசியல் பிம்பல் மாறப்போகிறதா என்று தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.