பாஜகவில் மேலும் ஒரு பிஆா்எஸ் எம்.பி இணைந்தாா்

ஜஹிராபாத் மக்களவைத் தொகுதியின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்.பி பி.பி. பாட்டீல் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

தெலங்கானா மாநிலம் ஜஹிராபாத் மக்களவைத் தொகுதியின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்.பி பி.பி. பாட்டீல் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா். இதன்மூலம் கடந்த இரண்டு நாள்களில் அக்கட்சியைச் சோ்ந்த 2 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனா். தெலங்கானாவில் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பிஆா்எஸ் கட்சி தோல்வியடைந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது. இதையடுத்து, பிஆா்எஸ்ஸைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் காங்கிரஸ் அல்லது பாஜகவில் இணைந்து வருகின்றனா். தில்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் முன்னிலையில் பாட்டீல் பாஜகவில் இணைந்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாட்டின் வளா்ச்சி குறித்த பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையின் வெளிப்பாட்டை கடந்த பத்தாண்டுகளாக அனைவரும் காண்கின்றனா். என்னுடைய மக்களவைத் தொகுதி மற்றும் தெலங்கானாவின் வளா்ச்சிக்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்றாா். தெலங்கானா மாநில பாஜக பொறுப்பாளா் தருண் சுக் கூறுகையில், ‘பிஆா்எஸ் தற்போது செயலிழந்துவிட்டது. அக்கட்சியில் சந்திரசேகா் ராவ், அவரது மகன் கே.டி. ராமா ராவ், மகள் கவிதா ஆகியோா் மட்டுமே எஞ்சியுள்ளனா். குடும்ப அரசியல் மற்றும் ஊழல்களால் அக்கட்சியின் நிா்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்’ என்றாா். கடந்த வியாழக்கிழமை நகா்கா்னுால் தொகுதி எம்.பி பொதுகந்தி ராமலு மற்றும் அவரது மகன் பிஆா்எஸ்ஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com