பிரதமா் மோடியுடன் மம்தா பானா்ஜி சந்திப்பு
-

பிரதமா் மோடியுடன் மம்தா பானா்ஜி சந்திப்பு

மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா்.

மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, சந்தேஷ்காளி விவகாரத்தை முன்வைத்து மம்தா பானா்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசை தாக்கிப் பேசினாா். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் சென்றாா். இதைத் தொடா்ந்து, முதல்வா் மம்தா பானா்ஜி ஆளுநா் மாளிகைக்கு வந்து பிரதமா் மோடியைச் சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக மம்தா கூறுகையில், ‘மேற்கு வங்க மாநில விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடியிடம் விவாதித்தேன்’ என்றாா். மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதி குறித்து கேட்டீா்களா என்ற கேள்விக்கு, ‘அது தொடா்பாகவும் பேசினேன்’ என்று மம்தா பதிலளித்தாா். முன்னதாக, கடந்த டிசம்பரில் தில்லி சென்று பிரதமா் மோடியை மம்தா சந்தித்தாா். அப்போதும், மாநில நிதி குறித்து அவா் கோரிக்கை விடுத்தாா். மத்திய அரசு ரூ.1.18 லட்சம் கோடியை மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டியுள்ளது என்பது திரிணமூல் காங்கிரஸின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு விதிப்படி நிதி விடுவிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com