”வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த விரும்பாதவர் மோடி”: ராகுல் கடும் விமர்சனம்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இந்தியாவை உருவாக்குவோம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இந்தியாவை உருவாக்குவோம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மத்தியில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும், ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி வேலைவாய்ப்பின்மை தொடர்பாக பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் இந்தியாவை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “பிரதமர் மோடியின் எண்ணம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவோம் என்பதல்ல. வேலைவாய்ப்பிற்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த தரவுகளின் அடிப்படையில் மொத்த 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வேயில் 2.93 லட்சமும், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சமும், பாதுகாப்பு அமைச்சகத்தில் 2.64 லட்சமும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “15 முக்கிய துறைகளில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதற்கு மத்திய அரசிடம் பதில் உள்ளதா?

பொய்யான வாக்குறுதிகளை சுமந்து வரும் பிரதமர் மோடியின் அலுவலகத்திலேயே முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன.

இளைஞர்களுக்கு பணிபாதுகாப்பைக் கொடுக்கும் நிரந்தரமான வேலைகளை வழங்க மறுக்கும் பாஜக அரசு அனைத்து பணிகளையும் ஒப்பந்த முறையில் செய்து வருகிறது. காலிப் பணியிடங்கள் நாட்டின் இளைஞர்களின் உரிமை, அவற்றை பூர்த்தி செய்யும் உறுதியான திட்டத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின் மூடிய கதவுகளைத் திறப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com