பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா: விரிவான ஒரு பகுப்பாய்வு

இந்தியாவில் பெண்களுக்கான பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்கிறதா என்பது குறித்து ஒரு விரிவான பகுப்பாய்வு.
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா: விரிவான ஒரு பகுப்பாய்வு
vanishri

இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான பயணிகளை தங்களின் அன்றாட வாழ்வின் தேவைகளான வாழ்விடங்களிலிருந்து பணியிடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனை, வங்கி மற்றும் சுற்றுலா தளங்கள் போன்ற இதர இடங்களுக்கு சென்று வருவதற்கு பொதுப் போக்குவரத்து வாகனங்கள் தான் பயன்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஐ.நா அவை முதல் உள்ளூர், மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் தாராளமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் நடவடிக்கையின் தொடர்ச்சியாக , இந்தியாவில் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நகரப் பகுதிகளை வாழ்வாதாரமாக எடுத்துக்கொண்டு கிராமங்களில் இருந்து நகர்ப்புற பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பு, சுயதொழில் போன்றவற்றுக்காக செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமத்துவமான பொதுப் போக்குவரத்து வசதி என்பது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியுள்ளது.

சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பிற்கு பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இந்த நவீன யுகத்தில், அவர்கள் பொதுப் போக்குவரத்தை அச்சமின்றியும் அல்லது தயக்கமின்றியும் அணுகுவதற்கு எளிதாகவும், பயணக்கட்டணம் செலுத்தும் நிலையில் இருப்பதையும் உறுதி செய்து வழங்குவது அரசுகளின் கடமையாகும். பாலின சமத்துவத்தை நோக்கி இந்தியா முன்னேறும் போது, ​​பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான பொதுப் போக்குவரத்தை உறுதி செய்வது என்பது வெற்று சொல்லாக இல்லாமல் பெண்களின் அடிப்படை உரிமையாக பொதுப்போக்குவரத்து மாறுகிறது. இந்தியாவில் பெண்களுக்கான பொதுப் போக்குவரத்தில் தற்போது உள்ள பாதுகாப்பின் தன்மையினையும், எதிர்கொள்ளும் சவால்களையும் பொதுப்போக்குவரத்துக்கான தீர்வுகளையும் விரிவாக கீழே காண்போம்.

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா: விரிவான ஒரு பகுப்பாய்வு
அரை நூற்றாண்டுக்கு முன்னரே விதவைகள் மறுமண உதவித் திட்டம்! மறுமலர்ச்சியின் முன்னத்தி ஏர் தமிழ்நாடு!

பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

இந்தியாவில் பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, ​​போதிய உள்கட்டமைப்பு இல்லாமையினால் பாலியல் துன்புறுத்தல் முதல் பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பொதுப் போக்குவரத்து பயணத்தின் போது, மாற்று பாலினத்தவரால் பெண்களை பற்றி தவறான வார்த்தைகள் கொண்டு மட்டமாக பேசுவது அல்லது கிண்டல் செய்வது, உடம்பில் தவறான இடங்களை தொட்டு தடவுவது மற்றும் அவர்களை பின்தொடர்ந்து தொந்தரவு செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.

குறிப்பாக இரவு 9 மணிக்கு மேல், சில வாகனத்தினுள்ளும் மற்றும் கிராமப்புற பேருந்து நிறுத்தங்களிலும், சரியான வெளிச்சம் இன்மையும், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாததும் பெண்களின் பயணத்தில் பாதிப்பை மேலும் அதிகரித்து அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது. கூடுதலாக, பெண்களுக்கான முழுமையான பாதுகாப்புக்கான கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் வகுக்கப்படாததால், பொதுப் போக்குவரத்தில் பெண்கள் பெரும்பாலும் உதவியின்றி துன்புறுத்தப்படுதல் அல்லது வன்முறையை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

பொது போக்குவரத்தில் பெண்களுக்கான சமமற்ற அணுகல் தன்மை:

பெண்களுக்கான பாதுகாப்பு விசயங்களை தவிர, சமூக-பொருளாதாரக் காரணிகளாலும் பெண்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்.

பொதுப்போக்குவரத்துக்கான வரையறுக்கப்பட்ட குறைவான நிதி ஆதாரங்கள் மற்றும் கட்டுப்பாடான கலாச்சார விதிமுறைகள் போன்றவையும் பெரும்பாலான பெண்களின் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் அன்றாட நடமாட்டத்தில் உள்ள பாதுகாப்பு சிக்கல்களை பொறுத்துக்கொண்டு வீட்டுப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மேலும், தற்போதைய பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களுக்கு என தனியான இருக்கைப் பகுதிகள், பெண் உதவியாளர்கள் மற்றும் பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் எளிதில் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகள் மற்றும் தாய்மார்களுக்கு பாலூட்டக்கூடிய அறைகள் போன்ற வசதிகள் பெரும்பான்மையாக இல்லாததால், குறிப்பாக பெண் மாற்றுத்திறனாளிகள் அல்லது சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு உகந்ததாக இல்லை.

பாதுகாப்பான பொது போக்குவரத்தை உருவாக்கும் முயற்சிகள்:

இந்தியாவில் பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கான பல சவால்கள் இருந்தபோதிலும், பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பையும் அவர்கள் எளிதில் அணுகுவதற்காகவும் மேம்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக, ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகளில் பெண்களுக்கு மட்டும் தனி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதினால், பெண் பயணிகளுக்கு அவர்களின் பயணத்தின் போது பாதுகாப்பான பயணத்தையும் உணர்வையும் வழங்குகிறது. மேலும், பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி புகாரளிப்பதற்காக பெண் போலீஸ் அதிகாரிகளை பணியமர்த்தல் மற்றும் ஹெல்ப்லைன்களை நிறுவி தீர்வுகள் வழங்கும் வழிமுறைகளை மேம்படுத்தியது பெண் பயணிகளிடையே பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது.

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கென மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைபடுத்துதல்:

பொதுப்போக்குவரத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென நீடித்த நிலையான மாற்றத்தை உறுதிப்படுத்த, அதன் உள்கட்டமைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்தை நிர்வகிக்கும் கொள்கைகளில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை. நன்கு ஒளிரும் பொதுப்போக்குவரத்து நிலையங்கள், பாதுகாப்பான காத்திருப்புப் பகுதிகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வது குற்றவாளிகளைத் தடுத்து, பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கிறது. கூடுதலாக, போக்குவரத்து ஊழியர்களுக்கான பாலின சமத்துவத்தை உணர்த்தும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதலும் மற்றும் பாலியல் சீண்டல் புகார்களை எவ்வாறு கையாண்டு நடவடிக்கை எடுப்பது போன்ற அறிவுரைகளை வழங்குதலும் மற்றும் அதற்கான சமூக விதிமுறைகளை உருவாக்கி விழிப்புணர்வு பிரசாரங்கள் பாலியல் குற்றங்கள் உருவாகாமல் செய்வதன் மூலமும் பெண்களை உள்ளடக்கிய மற்றும் மரியாதைக்குரிய போக்குவரத்து சூழலை வளர்ப்பதற்கு இன்றியமையாத படிகள் ஆகும்.

பொதுப்போக்குவரத்தின் மூலம் பெண்களை சுயசார்புள்ளவர்களாக மேம்படுத்துதல்:

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்புக் பிரச்சினைகளுக்கு அப்பால், மேம்படுத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள் வழங்குவதன் மூலம் பெண்களை மேம்படுத்துவது அவர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியம் ஆகும்.

பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் பெண்களுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்வில் பெண்கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளைத் தொடர உதவுகிறது, அதன் மூலம் அவர்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக அதிகாரமளிப்புக்கு பங்களிக்க வழிவகை செய்கிறது. பெண்களின் வாழ்வில் பொதுப்போக்குவரத்து நிறுவனங்களின் வழியாக சமமான சமூகத்தை உருவாக்க, அவர்களின் பாதுகாப்பான நடமாட்டத்திற்கும் மற்றும் பயண பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிப்பதன் மூலம் கொள்கை வகுப்பாளர்கள் நேர்மறையான மாற்றத்தை எளிதில் அடைய முடியும்.

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா: விரிவான ஒரு பகுப்பாய்வு
முதலுக்கு முந்து! சாதனைப் பெண் நீதிபதி!!

முடிவில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான பொதுப் போக்குவரத்து பயணத்தை உறுதிசெய்வதற்கு உடனடியாக அவர்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை சரி செய்யவும் பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. பொதுப்போக்குவரத்து பயணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து அதனை சரி செய்வதற்கான தீர்வுகளை அங்கீகரிப்பதன் மூலமும், அதற்கான இலக்குகளை நிர்ணயித்து செயல்படுத்துவதன் மூலமும், பெண்களை உள்ளடக்கிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய பாதுகாப்பான பொது போக்குவரத்து அமைப்பை நாம் உருவாக்க முடியும்.

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தின் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பொதுப் போக்குவரத்தை உருவாக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து கொள்கை வகுப்பாளர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் சமூகம் இணைந்து பொதுப்போக்குவரத்தின் வழியாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகிறது. பொதுப் போக்குவரத்தின் மூலம் பெண்களின் வாழ்வில் அதிகமான நடமாட்டம் செய்வதற்கும் வேலை வாய்ப்புகளுக்கு எளிதில் அணுகவும் பொருளாதார வலுவூட்டலுக்கும் நேர சேமிப்புக்கும் வீட்டுச் செலவுகள் குறைவதற்கும் அனைத்து சமூகங்களை ஒன்றிணைக்கவும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு பெறவும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு அடையவும் பெண் பாதுகாப்பு இருப்பதற்கும் மற்றும் பாலின சமத்துவம் அடைவதற்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்கும் பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

கட்டுரையாளர் : பன்னாட்டு போக்குவரத்து நிபுணர், சென்னை

மெயில்: adroit.amudhan@gmail.com

போன்: 97899 59270

மார்ச் 8 - உழைக்கும் மகளிர் நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com