முதலுக்கு முந்து! சாதனைப் பெண் நீதிபதி!!

1978ல் புதுதில்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
முதலுக்கு முந்து! சாதனைப் பெண் நீதிபதி!!

ஏய்…. லீலா எங்க ஓடற… நில்லு… நில்லு …என்று அண்ணன்கள் இருவரும் அந்தச் சுட்டிப் பெண்ணைத் துரத்திக் கொண்டு ஓட அவள் சடாரென நின்று அவர்கள் இருவரையும் பார்த்து உங்களுக்கு முன்பாக நான் ஓடிப்போய் மரத்தில் ஏறுவதற்குத்தான் ஓடுகிறேன் என்று குறும்பாக பதில் கூறினாள் லீலா.

இதோ பார் இதெல்லாம் ஆண்கள் விளையாட்டு, என் நண்பர்களும் வருவார்கள் என்று அவர்கள் கூறினாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லை அந்த ஏழு வயது துறு துறுப்பான பெண்ணுக்கு. ஒரே ஓட்டமாக இவர்களை முந்திச் சென்று தோட்டத்தில் உள்ள மரத்தின் மீது விடுவிடுவென்று இலாவகமாக ஏறி உச்சிக் கிளையில் அமர்ந்துகொண்டு அண்ணன்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே சத்தமாக ..பார்த்தீர்களா.. நான் எப்படி உங்களுக்கு முன்பாக ஏறிவிட்டேன் என்று கூறினாள். இருவரும் அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டனர். வேறுவழியில்லை அந்த குறும்புகார பெண்ணை சகித்துக் கொள்வது தவிர.

இருந்தாலும் அண்ணன் இராஜ்குமாருக்கும் அவனுடைய அடுத்த தம்பி சசிக்கும் இவள் மீது அதிக பாசம் ஒரே தங்கையாயிற்றே என்று. அதே போல எந்த விளையாட்டு என்றாலும் இவளும் உடன் வந்து முன்னால் நிற்பாள். எதாவது தொல்லை செய்வாள் என்று சேர்த்துக் கொள்வதும் உண்டு.

டார்ஜிலிங்கில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றில் தங்கி இருவரும் படித்து வந்தார்கள். லீலா அதே ஊரில் உள்ள “தத்” குடும்பத்தினருடன் தங்கி படித்து வந்தாள். அவளுடைய தந்தை சேத் அவர்கள் ரயில்வே துறையில் வேலை பார்த்து வந்ததால் அப்போது வேலை நிமித்தமாக அடிக்கடி நாடெங்கும் அனுப்பப்படுவார். அவர் மனைவியும் அவருடன் ஊர் ஊராகச் செல்ல வேண்டி இருந்ததால் குழந்தைகளைத் தன் குடும்ப நண்பர்களான தத் தம்பதியினர் வீட்டில் விட்டுச் சென்றனர், லீலா மட்டும் அவர்கள் வீட்டில் இருந்து படித்து வந்தாள், அவளுக்கு அடிக்கடி போரடிக்கும், தன் அண்ணன்கள், பெற்றோர் எப்போது வருவார்கள் என்று எப்போதும் ஆவலுடன் இருப்பாள். வார இறுதியில் அண்ணன்களின் வருகை அவளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

அண்ணன்களோ இவளைத் தொல்லையாக நினைத்தனர். நாம் விளையாடும் விளையாட்டில் எல்லாம் இவள் குறுக்கே குறுக்கே வந்து தானும் விளையாடுகிறாளே என்று. அவளுக்கோ தன் அண்ணன்கள் தன்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற கோபம்.

தங்கை உச்சி கிளையில் அமர்ந்திருந்ததைக் கண்ட சசி கூறினான் “சரியான தெறியாட்டப் பெண் இல்லை” என்று. அவளுடைய இந்த குணத்திற்காகத்தான் அவளுக்கு இவன் வைத்த பெயர்தான் த்ரில்லி. தான் அவளைத் திட்டினாலாவது ரோஷப்பட்டு வரமாட்டாள் என்று பார்த்தான், ஆனால் அவளோ அவர்கள் வெளியே செல்லக் கிளம்புவதற்குள் மின்னல் போல ஓடி மரத்தில் ஏறி அமர்ந்து உங்களைத் தோற்கடிப்பேன் என்று சொன்னேன் இல்லையா என்று எக்காளமிட்டாள். இவர்கள் பதில் சொல்லமுடியாமல் பெருமூச்சு விட்டனர்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாய் வருவார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தந்தையும் வந்துவிடுவார். அந்த நேரம் ஒரு வீட்டை வாட கைக்கு எடுத்துக் கொண்டுத் தங்கிச் செல்வார்கள் . குழந்தைகளும் அங்கே சென்றுவிடுவார்கள்.

முதலுக்கு முந்து! சாதனைப் பெண் நீதிபதி!!
அரை நூற்றாண்டுக்கு முன்னரே விதவைகள் மறுமண உதவித் திட்டம்! மறுமலர்ச்சியின் முன்னத்தி ஏர் தமிழ்நாடு!

லீலாவின் தாய்க்கோ தன்மகள் அழகாக இருக்கிறாள் இந்த சிறு வயதில் நடனம் மற்றும் பாட்டு கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லி ஆசிரியரை ஏற்பாடு செய்தார். ஆனால் லீலாவுக்கு இதிலெல்லாம் ஆர்வம் சிறிதும் இல்லை. புத்தகம் படிப்பது அண்ணன்களுக்கு சரியாக போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவது, பெண்ணாக இருப்பதால் தான் அவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் அல்ல என்று நிரூபிப்பது இதுதான் அவளுக்கு மிகவும் பிடித்த விசயங்கள்.

நீ இப்படி விளையாடுவதற்கு பதில் இன்னும் சற்று கவனமாகப் படிக்கலாம் என்பார்கள் அம்மா. அவள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள். அதான் வகுப்பறையில் ஆசிரியர் சொன்னதை செய்து விடுகிறோமே அதனால் தாம் ஒரு படிக்கும் மாணவிதான் என்று எண்ணினாள்.

அன்று வகுப்பில் ஆசிரியை இவளுடைய வகுப்பு மாணவியான குலுவைத் திட்டிக் கொண்டு இருந்தார். இதென்ன எழுத்தா இது ஒன்றும் புரியவில்லை கிறுக்கலாக உள்ளது என்று. வகுப்பில் அனைவரும் சிரித்தனர். இதேபோல் அனைத்து ஆசிரியர்களிடமும் திட்டு வாங்குகிறாள். பாவம் குலு என்று நினைத்தாள். மீண்டும் தன் அண்ணன்களும் பெற்றோரும் வீட்டிற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தியைக் காலையில் கேட்டதில் இருந்து எப்படி எப்படியெல்லாம் விளையாடுவது என்று அந்த சிந்தனையில் மூழ்கி இருக்கும் போது” என்ன பகல் கனவு காண்கிறாயா லீலா” என்று ஆசிரியை அதட்டியவுடன்தான் நனவுலகிற்குவந்தாள், ஆனாலும் ஆசிரியர் கோபப்பட்டது அவளுக்கு உரைக்கவே இல்லை. சாயங்காலம் அண்ணன்களுடன் எவ்வாறு பொழுதைப்போக்கலாம் என்று அதில் திரும்பவும் மூழ்கிவிட்டாள்.

பெற்றோருடனும் அண்ணன்களுடனும் அந்தவாரம் மகிழ்ச்சியாக சென்றது. அடுத்த வாரம் காலாண்டுத் தேர்வு தொடங்க இருப்பதைப் பற்றி கவலைப்படவில்லை. தனக்குத்தான் எல்லா பாடங்களும் தெரியுமே என்று நினைத்த வண்ணம் தனக்குள்ளே சிரித்தபடி தோட்டத்தின் மூலையில் இருந்த பெரிய மரத்தின் மீது கிடுகிடு என்று ஏறத்துவங்கினாள்.

பள்ளிவிட்டு வந்ததும் விளையாடத் தொடங்கிய அவளைப் பார்த்து அவளுடைய தாய் வந்ததில் இருந்து விளையாடிக் கொண்டே இருக்கிறாய் எப்போது படிக்கப் போகிறாய் என்று கேட்டார்.

கிளையில் தொங்கியவாறே நான் என் பாடங்களைப் பள்ளியிலேயே முடித்துவிட்டேன் அம்மா என்று கூறினாள். அப்படி என்றால் வா நான் உனக்கு சிறு தேர்வுவைக்கிறேன் என்று அன்னை கூறவே இல்லை இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டியுள்ளது நாளைக்கு தேர்வு வையுங்கள் என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வந்து படிக்க அமர்ந்தாள். ஆனால் கவனம் படிப்பில் இல்லை. அடிக்கடி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தாள். அண்ணன்கள் என்ன செய்கிறார்கள் என்ற பார்க்கப் போவாள். நாம்தான் படித்துவிட்டோமே என்று புத்தகத்தை திறக்கும் போதெல்லாம் நினைத்தாள். மெத்தனமாக இருந்தாள்.

அந்தத் தேர்வும் வந்தது. அனைவரும் தேர்வு கூடத்திற்கு வந்தனர். அனைத்து மாணவிகளும் தேர்வுக்குப் படித்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அதை காதில் கொண்டே வந்தவளுக்கு அப்போது தான் உரைத்தது. தான் பாதிப் பாடங்களைப் படிக்கவில்லை என்பது. வினாக்கள் எதுவும் புரியவில்லை .இருப்பினும் பயத்தை மறைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள். முதலில் எழுதி முடித்ததும் அவள்தான். மற்றவர் இன்னும் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். குலு கூட மேசைமீது கவிழ்ந்தவாறு ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். லீலாவுக்கு அப்போது தான் சற்று கவலை ஏற்பட்டது. அனைத்து தேர்வுகளிலும் இதே நிலை தொடர்ந்தது. அன்று தர அறிக்கை கொடுக்கும் நாள். ஆசிரியர் தன் பெயரை முதலில் கூறுவார்கள் என்று நினைத்தாள். ஆனால் கடைசியில் குலு பெயரைக் கூட கூறிவிட்டார்கள், அதற்கு அடுத்ததாகத் தான் அவள் பெயரை உச்சரித்தார்கள். வெற்றி பெற்றவர்களில் முதலாவதாக உச்சரிப்பார் என்று பார்த்தால் தோல்வியடைந்தவர்களில் முதலாவதாக அழைத்தார். வகுப்பில் கடைசி. தொண்டையில் ஏதோ கசப்பாக உணர்ந்தாள். ஆகா நாம் படிக்காமல் நேரத்தை வீணாக்கி விட்டோமோ இதையெல்லாம் பெற்றோரிடம் எவ்விதம் சொல்வது என்று நினைத்துக் கொண்டே கிளம்பிவிட்டாள்.

வீட்டிற்குச் சென்றவுடன் முகம் கை கால் கூட கழுவாமல் தந்தையிடம் நீட்டினாள் தர அறிக்கையை. நான் தேர்வில் தோற்றுவிட்டேன் என்று தரையை பார்த்தபடி கூறினாள். அவர் தன் மனைவியிடம் தந்தார்.. எதுவுமே சொல்லவில்லை. முகம் கழுவி போய் பாலைக் குடி என்றுமட்டுமே சொன்னார். இருவரும் தன்னை கோபித்துக் கொள்ளவில்லை என்பதே குற்ற உணர்ச்சியை அளித்தது. போய் படுக்கையில் குப்புற விழுந்து படுத்தாள். எல்லோரும் குலுவைப் பார்த்து சிரித்ததைப் போல தன்னைப் பார்த்தும் சிரிப்பார்களே என்று நினைத்தாள். இப்போது தான் குலுவின் மனநிலை தனக்குப் புரிந்ததாக நினைத்தாள். தான் இன்னும் சற்று கவனமாகப் படித்திருந்தால் தெர்ச்சி பெற்றிருக்கலாமே என எண்ணி ஏங்கினாள். தந்தையும் தாயும் அறைக்குள் வந்தனர். லீலா என்று அழைத்ததும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்”அப்பா” என்றாள். நான் ஏன் இங்கு குறைந்த மதிப்பெண் வாங்கி வாந்திருக்கிறாய் என்று கேட்க வரவில்லை. இதற்குக் காரணம் உன் மனப்பான்மைதான். நீ படிப்பில் கவனம் செலுத்தவில்லை, அதைப் பொருட்டாக மதிக்கவும் இல்லை. இதோபார் லீலா மாணவர் ஒவ்வொருவரின் கடமையும் நன்றாகப் படிப்பதுதான் பெற்றோர்கள் அதற்காகத் தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆகவே நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றொன்றும் சொல்கிறேன் நம்மில் நாம் எதைச் செய்தாலும் அதை மிகச் சிறப்பாக செய்யக் கடமை பட்டிருக்கிறோம். நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள். செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருப்பது கேவலமில்லை. ஆனால் அந்த தொழிலாளி செருப்பை மட்டமாகத் தைத்தால்தான் கேவலம். புரிகிறதா என்றார். லீலா தலையை மட்டும் அசைத்தாள் உணர்ச்சியால் தொண்டை அடைத்தது. தன் தந்தையின் மீது அன்பு பெருக தன் மனதினுள் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தாள். ஒருமுறை தோல்வி அடைந்ததே போதும் இனிமேல் தன் வாழ்வில் வெற்றிமட்டுமே இலக்கு. முதலிடம் மட்டுமே பெறவேண்டும் என்பதில் உறுதி கொண்டாள். விளைவு ஒவ்வொரு தேர்விலும் முதலிடம் பெற்றாள். இரண்டாம் இடம் பற்றி சிந்திக்கக் கூட இல்லை.

ஆண்டு தோறும் தன் திறமையைப் போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தி உயர்த்திய வண்ணம் இருந்தாள், இந்த போட்டி மனப்பான்மைதான் அவளை இங்கிலாந்தில் பார் இறுதித் தேர்வில் அனைத்து மாணவர்களையும்விட முதலிடம் பெற உதவியது எனலாம். இதன் விளைவாக அவருக்கு “லாங்க்டன்” பதக்கம் கிடைத்தது. அப்பதக்கத்தைப் பெறும் முதல் பெண்மணி.

தன் வாழ்க்கையில் முதலிடத்தைத் தவிர வேறு எதையும் பெறக்கூடாது என்ற உறுதிக்கு லீலா ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினார். வழக்கறிஞராக, முதல் பெண் நீதிபதியாக திகழ்ந்தார்.

முதலுக்கு முந்து! சாதனைப் பெண் நீதிபதி!!
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா: விரிவான ஒரு பகுப்பாய்வு

மின்னல் வேகத்தில் வாழ்க்கையில் உயர்ந்தவர், பாட்னா பின்னர் கல்கத்தா நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1978ல் புதுதில்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பெண்உரிமை மற்றும் குழந்தைகளுக்கான சமூகப் பணிகளில் ஈடுபட்ட இவர் குறிப்பாக அடிமைத் தொழிலாளர்களாக இருந்து வாடுபவர்களுக்காக போராடுபவர்களில் முன்னனியாக நின்றவர். இயற்கை வள பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைக்காக பாடுபட்டவர், நீதிபதி சுனந்தா பண்டாரே அமைப்பின் நிறுவனர் மற்றும் அறக் கட்டளையாளராகப் பணியாற்றினார். 1930 ஆம் ஆண்டு பிறந்த திருமதி லீலா சேத் அவர்கள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி மறைந்தார்.

பொதுவாக நீதிபரிபாலனம் என்று சொன்னாலே ஆண்கள் மட்டுமே நீதி வழங்கும் இடத்தில் இருந்ததை மாற்றி பெண்களும் நீதிபதியாக சாதிக்கலாம் என்பதற்கு திருமதி லீலா சேத் அவர்கள் உதாரணமாகத் திகழ்கிறார். தற்போதும் கீழமை நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி , உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து பல பெண்கள் சாதனை புரிந்துள்ளனர். அதேபோல சட்டக் கல்லூரிகளில் எண்ணற்ற மாணவிகள் சட்டம் பயின்று வருகிறார்கள், அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பேராசிரியர்கள், சட்டக்கல்லூரி முதல்வர்கள் என பல பெண்கள் எண்ணிக்கையில் நிறைய பேர்கள் உள்ளனர். சரியான நீதியை பெண்களாலும் வழங்க முடியும் என்பதற்கும் சமதர்ம சமூதாயம் மலர்கிறது என்பதற்கும் இவையே சான்றாகத் திகழ்கின்றது. பெண்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

கட்டுரையாளர்: பட்டதாரி ஆசிரியர், சக்கராப்பள்ளி.

மார்ச் 8 - உழைக்கும் மகளிர் நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com