அரை நூற்றாண்டுக்கு முன்னரே விதவைகள் மறுமண உதவித் திட்டம்! மறுமலர்ச்சியின் முன்னத்தி ஏர் தமிழ்நாடு!

மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்ட் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டைப் பற்றி...
நெற்றித் திலகம்!
நெற்றித் திலகம்!
Published on
Updated on
2 min read

மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் பெண்களுக்கு ரூ. 2 லட்சம் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பய் சோரன் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது – நாட்டிலேயே முதன்முறை என்று குறிப்பிட்டு.

ரூ. 2 லட்சம் என்ற தொகை மட்டுமே முதல் முறையாக இருக்கலாம். விதவைப் பெண்கள் மறுமணத்தை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அரை நூற்றாண்டுக்கும் முன்னர் இருந்தே முன்னணியில் இருக்கிறது தமிழ்நாடு.

49 ஆண்டுகளுக்கு முன் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் நாள் அன்றைக்கு முதல்வராக இருந்த மு. கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது ஆதரவற்ற கைம்பெண்களுக்கு உதவும் மறுவாழ்வுத் திட்டம்.

நெற்றித் திலகம்!
விதவை மறுமண ஊக்கத்தொகை: முன்மாதிரியாக மாறிய ஜார்க்கண்ட்

ஏற்கெனவே கருணாநிதியின் முந்தைய பிறந்த நாள்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட - 1971-ல் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், 72-ல் இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம், 73-ல் கை ரிக்.ஷாக்களை அகற்றி, இலவச சைக்கிள் ரிக்.ஷாக்கள் வழங்கும் திட்டம், 74-ல் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் – அநாதைச் சிறுவர் சிறுமியர் நல்வாழ்வுக்காகவும் கைம்பெண்கள் மறுவாழ்வுக்காகவும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

18 வயது முதல் 30 வயது முடியவுள்ள விதவைப் பெண்களைத் மறுமணம் புரிந்துகொள்கிறவர்களுக்குச் சமுதாயப் புரட்சியை ஊக்குவிக்கின்ற வகையில் அந்தக் கணவன் – மனைவி இருவரின் பெயராலும் ரூ. 5 ஆயிரம் மதிப்பு சேமிப்புச் சிறப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த ஐயாயிரத்தை ஏழு ஆண்டுகள் கழித்துத் தம்பதியர் திரும்பப் பெறும்போது ரூ. 8,587 பெற முடிந்தது. 1975-ல் ரூ. 5 ஆயிரம் என்பது இன்றைய பண மதிப்புடன் ஒப்பிட எவ்வளவாக இருந்திருக்கும் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

நெற்றித் திலகம்!
முதலுக்கு முந்து! சாதனைப் பெண் நீதிபதி!!

கைம்பெண்களின் திருமணத்தை ஊக்குவிக்கும் இந்த சமுதாயப் புரட்சித் திட்டத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயச் சூழ்நிலையில் அரசே முன்னெடுத்துச் செய்தபோது, கூடுதலாக மேலும் சில உதவித் திட்டங்களும்  அறிவிக்கப்பட்டன.

இத்தகைய கைம்பெண்களை மணப்பவர்களுக்குத் தகுதி அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

45 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற கைம்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 20 ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆதரவற்ற கைம்பெண்களும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களும்  தையல் பயற்சி பெற்றிருந்தால் இலவசமாகத் தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக தொழிற்பயிற்சி பெற்ற கைம்பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட்டது.

எல்லாமும் அரை நூற்றாண்டுக்கு முன்னால்!

கருணாநிதி அறிமுகப்படுத்திய பின்னர், எம்.ஜி.ஆர்., ஜானகி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என எத்தனையோ முதல்வர்களும் அரசுகளும் மாறினாலும் இப்போதும் - கருணாநிதி மகன் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருக்கும் காலத்திலும் - இந்தத் திருமண உதவித் திட்டம் தொடருகிறது – டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் என்ற பெயரில்.

மணமகளின் வயது 20-க்கு மேலும் மணமகனின் வயது 40-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு எதுவுமில்லை. கல்வித் தகுதி இல்லாத நிலையில் ரூ. 25 ஆயிரமும் தாலிக்காக ஒரு சவரனும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு முடித்திருந்தால் ரூ. 50 ஆயிரமும் தாலிக்காக ஒரு சவரனும் வழங்கப்படுகிறது.

நெற்றித் திலகம்!
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா: விரிவான ஒரு பகுப்பாய்வு

"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா" என்று இளம் கைம்பெண்களின் வேதனையை மனமுருகிப் பாடியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

கருணாநிதி தலைமையிலான மாநில அரசு இப்படியொரு திட்டத்தை அறிவிப்பதற்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பிருந்தே திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் நாட்டின் வேறெந்தவொரு மாநிலத்தையும்விட அதிகளவில் தமிழ்நாட்டில் விதவைத் திருமணங்கள் நடந்துகொண்டிருந்தன.

திராவிட இயக்க மேடைகளில் கைம்பெண் திருமணங்களும் சாதி, சடங்குகள் மறுப்புத் திருமணங்களும் நடந்து வந்திருக்கின்றன.

நம் நாட்டில் காலங்காலமாக விதவைப் பெண்களுக்குப் பல்வேறு சமூக காரணங்களாலும் நம்பிக்கைகளாலும் மறுமணம் மட்டுமல்ல, வாழ்க்கையே, வாழ்வதற்கான உரிமையே மறுக்கப்பட்டு வந்துள்ளது. சதி என்ற பெயரில் உடன்கட்டையேற்றப்பட்டு உயிர்க்கொலையும் நடந்துவந்திருக்கிறது. குடும்ப கௌரவம் என்ற பெயரில் (குழந்தைத் திருமணங்கள் காரணமாக) எண்ணற்ற இளம் விதவைகள் வாழ்ந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே, 1856 ஆம் ஆண்டு, ஹிந்து விதவைகள் மறுமணச் சட்டம் (பின்னர், 1956) இயற்றப்பட்டதன் காரணமாக விதவைகள் மறுமணங்களுக்குச் சட்ட பாதுகாப்பு கிடைத்தது. இப்படியொரு சட்டம் வரக் காரணமாக இருந்தவர் கொல்கத்தா சமஸ்கிருத கல்லூரி முதல்வரான பண்டிட் ஈசுவர சந்திர வித்யாசாகர். என்றபோதிலும் மக்கள் மத்தியில் மனமாற்றம் இல்லாததால் மறுமணங்கள் குறைவாகவே நடந்துவந்தன.

தொடர்ந்து, சமூக சீர்திருத்த இயக்கங்கள் காரணமாகவும் கல்வியறிவு பரவியதன் காரணமாகவும் மக்கள் மத்தியில் விதவையர் மறுமணங்கள் பெருகத் தொடங்கின.

முன்னத்தி ஏராகத் தமிழ்நாட்டில் அதிகளவில் விதவை மறுமணங்கள் நடைபெற்றன. இப்போதும் நாட்டிலேயே அதிக அளவில் விதவை மறுமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

மார்ச் 8 - உழைக்கும் மகளிர் நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com