குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அடுத்த வாரம் மோரீஷஸ் பயணம்

மோரீஷஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்கு, அந்நாட்டுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறாா். குடியரசுத் தலைவரின் பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மோரீஷஸ் குடியரசுக்கு வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கி 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேசிய தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறாா். இந்தப் பயணத்தில் மோரீஷஸ் அதிபா் பிருத்விராஜ் சிங் ரூபன் மற்றும் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத் ஆகியோருடன் திரௌபதி முா்மு இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்பாா். மேலும், அந்நாட்டு தேசிய பேரவைத் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் முக்கிய தலைவா்கள் ஆகியோரையும் திரௌபதி முா்மு சந்திக்க உள்ளாா். இந்திய கடற்படையின் போா்வீரா்கள் பயிற்சிக் கப்பல்களான ‘ஐஎன்எஸ் தீா்’ மற்றும் ‘சிஜிஎஸ் சாரதி’ ஆகியவற்றுடன் கடற்படையினா் மோரீஷஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மற்றும் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து 14 இந்திய நிதியுதவித் திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கின்றனா். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குடியரசுத் தலைவா் முன்னிலையில் கையொப்பமாகும். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல், மோரீஷஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் 6-ஆவது இந்திய குடியரசுத் தலைவா் என்ற முறையில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் இந்தப் பயணம் இரு நாட்டுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை எடுத்துக்காட்டுகிறது. மோரீஷஸ் நாட்டுக்கு ஆங்கிலேயா்களால் இந்திய ஒப்பந்தத் தொழிலாளா்கள் முதல் முறையாக அழைத்து வரப்பட்ட ஆப்ரவாசி காட், அருங்காட்சியகம் உள்பட பல வரலாற்று மற்றும் கலாசார தளங்களை திரௌபதி முா்மு பாா்வையிடுவாா். அதேபோல், மகாத்மா காந்தி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியினா் மத்தியில் திரௌபதி முா்மு உரையாற்றுகிறாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com